ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: கிராம பஞ்சாயத்து தலைவர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அடோரா பகுதியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர் ஷபீர் அகமது மிர். இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதிய போலீசார் அவரை ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்பு விடுதியில் தங்க வைத்திருந்தனர்.

ஆனால் போலீசாருக்கு தெரிவிக்காமல் அவர் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்கு வந்த நிலையில், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

படுகாயம் அடைந்த  ஷபீர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர்  மனோஜ் சின்ஹா, கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாத சூழலை அகற்றுவதில் உறுதியாக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

கிராம பஞ்சாயத்து தலைவர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு உயிரிழந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அப்பகுதி முற்றுகை யிடப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில்  தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஷுவாக்லன் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச்சண்டை நடைபெறும் பகுதியில் 2-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Malaimalar