காங்கிரஸ் விரும்பினால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் இணையலாம்- மம்தா அழைப்பு

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:-

கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட மூன்று மாதங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது போதும்.

உத்தர பிரதேச தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருட்டு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சோர்ந்துவிடாமல், அந்த இயந்திரங்களை தடயவியல் சோதனை நடத்தும்படி வலியுறுத்த வேண்டும். அகிலேஷ் யாதவின் வாக்கு சதவீதம் இந்த முறை 20 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி நம்பகத்தன்மையை இழந்துவருகிறது. காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம். இப்போதைக்கு ஆக்ரோஷமாக இருக்க வேண்டாம், நேர்மறையாக இருங்கள். இந்த வெற்றி பா.ஜ.க.வுக்கு பெரும் இழப்பாக அமையும். இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024 மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை.

 

Malaimalar