கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுடன் சேலத்தில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா தொடக்கம்

75-வது சுதந்திர தின பவளவிழாவினையொட்டி, தீரத் தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ‘சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா‘ நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில்  ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா‘ நேற்று தொடங்கியது. தொடர்ந்து  19-ந்தேதி வரை ஒரு வாரம் விழா நடைபெறவுள்ளது.

இதில் தந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி, வேளாண்மை துறையால் பாரம்பரிய நெல் கண்காட்சி மற்றும் விவசாயிகளுக்கான அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள், உணவு பாதுகாப்புத் துறையால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உணவு பொருட்கள் தரம் குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கங்களும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பாரம்பரிய ஊட்டசத்து நிறைந்த இயற்கை உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள், கைத்தறி மற்றும் துணிநூல் துறைகளின் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகளும் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாலை நேரங்களில் கலைப் பண்பாட்டுத் துறையின் மூலம் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.

 

 

Malaimalar