மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கண்ணனூரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணனூருக்கு சென்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து மத்திய – மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
எண்ட பேர் ஸ்டாலின் என மலையாளத்தில் சில நிமிடங்கள் முதல்- அமைச்சர் பேசினார். பின்னர் தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் கேரள முதல்வர் பினராயி விஜயன் செயல்படுகிறார். எனக்கு வழிகாட்டும் முதல்வராக பினராயி விஜயன் திகழ்கிறார். சிறந்த மாநில ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் பினராயி விஜயன். மத்திய அரசை பற்றி கவலைப்படாமல் சிறப்பாக ஆட்சி நடத்துபவர் பினராயி விஜயன்.
இந்தியாவை காப்பற்ற வேண்டும் எனில் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மத்திய அரசு மக்களை பழிவாங்குகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஆளுநர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். ஆளுநரை வைத்து மாநிலங்களை ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல. வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஒற்றை தன்மை அதிகாரங்கள் இல்லை
மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டதாக இந்திய அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Malaimalar