சீனா பாதிப்பை ஏற்படுத்தினால் இந்தியா பதிலடி கொடுக்கும்- பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உறுதி

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்றார் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அவர் லடாக் எல்லையில்  சீன ராணுவத்தினருடனான மோதலின்போது இந்திய ராணுவ வீரர்கள் காட்டிய வீரம் குறித்து விவரித்தார்.

அவர்கள் (இந்திய வீரர்கள்) என்ன செய்தார்கள், நாங்கள் (அரசு) என்ன முடிவுகளை எடுத்தோம் என்பதை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது, ஆனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால், யாரையும் இந்தியா விட்டு வைக்காது என்ற செய்தி (சீனாவுக்கு) சென்றுள்ளது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க

சமூகத்தினரிடம் உரையாற்றிய ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது என்றார்.

அடுத்த சில ஆண்டுகளில், உலகின் முதல் மூன்று பொருளாதார வளம் மிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது  என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா ஒரு நாட்டோடு நல்ல உறவை வைத்திருந்தால், அது வேறு எந்த நாட்டுடனான உறவை பாதிக்கும் என்று கருதக் கூடாது என்றும் அவர் கூறினார். அது போன்ற தூதரக ரீதியான உறவை இந்தியா ஒதுபோதும் தேர்ந்தெடுக்காது என்றும் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார்.

கிழக்கு லடாக் பகுதியில் மோதலை தவிர்க்க,  இந்தியாவும் சீனாவும் இதுவரை 15 சுற்று ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்நிலையில் சீனா குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Malaimalar