ஆண் பிள்ளைகளையும் கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும்- பெற்றோருக்கு கவர்னர் தமிழிசை அறிவுரை

சென்னையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர். தமிழிசை சவுந்தர ராஜன் பேசியதாவது:

மாணவர் பருவம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம். இந்த பருவத்தில் நன்றாக படிக்க வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். தப்பில்லை. ஆனால் எல்லாவற்றையும் ஒரு கட்டுப்பாட்டுடன் கொண்டாடுங்கள் அது உங்கள் வளர்ச்சிக்கு பலம் சேர்க்கும்.

படிப்பிலும் திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது போல் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கையும் சரியான கால கட்டத்தில சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். நான் ஒரு மருத்துவர் என்ற ரீதியில் சொல்கிறேன். பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் திருமணமாகி கர்ப்பம் அடைவதில் பல சிக்கல்கள் ஏற்படும்.

உரிய கால கட்டத்தில் பெற்றோர் பார்க்கும் வரன்களை அலசி, ஆராய்ந்து தேர்வுசெய்து குடும்ப வாழ்க்கைக்கு தயாராக வேண்டும். அதற்காக தமிழிசை காதல் திருமணத்திற்கு எதிரானவர் என்று நினைத்து விடாதீர்கள். காதலிப்பது தப்பில்லை. நீங்கள் காதலிக்கும் பெண்ணோ, அல்லது ஆணோ அவர் உங்களை ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும். ஏமாற்றுபவராக இருந்து விடக் கூடாது என்பதை கவனித்துக் காதலித்தால் கடைசி வரை அந்த காதல் வாழ்க்கை இனிக்கும்.

இங்கு நிறைய பெற்றோர்கள். அமர்ந்து இருக்கிறீர்கள். குழந்தை வளர்ப்பில் கவனமும், பாரபட்சமும் காட்டக் கூடாது.

மகள்களாக இருந்தால் இத்தனை மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும். ஆண்களுடன் பழகக்கூடாது. வெளியே சுற்றக்கூடாது. உடை விசயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அதை கண்காணிக்கிறோம்.

ஆனால் மகன்கள் விஷயத்தில் அப்படி இருக்கிறோமா? அவர்கள் எந்த நேரத்திலும் வரலாம். எங்கு வேண்டுமானாலும் போகலாம். எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று விட்டு விடுகிறோம். கண்டிப்பும், கட்டுப்பாடும் இல்லாததால் சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை தடம் புரளவைக்கிறது. ஆண்களை சரிசெய்யும் போது பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். மகள்களை போல் மகன்களையும் கட்டுப்பாட்டுடன் வளருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Malaimalar