உயிரை பறித்த கல்வி கட்டணம்: ரூ.7 ஆயிரம் கட்ட முடியாததால் தூக்கில் தொங்கிய பிளஸ் 2 மாணவி

சென்னை புழல் லிங்கம் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன். டெய்லராக உள்ளார். இவரது மகள் பிருந்தா. 17 வயதான இவர் பிளஸ்2 படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் ரூ.7 ஆயிரம் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் மாணவி பிருந்தா மனம் உடைந்து தூக்கில் தொங்கி உயிரை விட்டிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் மாணவியின் மரணம் தொடர்பாகவும், அவரது ஏழ்மை நிலைமை குறித்தும் உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.

மாணவி பிருந்தா மாதவரம் தபால்பெட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். ரூ.7 ஆயிரம் கல்வி கட்டணத்தை செலுத்தாமல் இருந்தார். தந்தை கிருஷ்ணனிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். கிருஷ்ணனால் உடனடியாக ரூ.7 ஆயிரம் பணத்தை கட்ட முடியாத நிலையில், அவர் மகளிடம் “கவலைப்படாதேம்மா… கடன் வாங்கியாவது அப்பா பீஸ்கட்டி விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பள்ளிக்கு பிளஸ்2 தேர்வுக்கு மாணவிகள் தயாரானார்கள். பிருந்தாவும் தயாரானார். நன்றாக படிக்கும் இவர் கல்வி கட்டணம் கட்டாத நிலையிலும் பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதித்து ஹால் டிக்கெட்டை வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில்தான் மாணவியின் தந்தை கிருஷ்ணன், வருகிற வெள்ளிக்கிழமை கல்வி கட்டணத்தை கட்டி விடலாம் என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் கல்வி கட்டணத்தை கட்ட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மாணவி பிருந்தா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்ப வறுமை காரணமாக மாணவியின் தாய் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கிருஷ்ணனுக்கு 2 மகள்கள். தற்கொலை செய்து கொண்ட பிருந்தாவின் தங்கை பள்ளி படிப்பை தொடர்கிறார்.

மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளிக்கு நேரில் சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை கட்டினால்தான் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவுறுத்தவில்லை என்பதும், மாணவியே மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

 

 

Malaimalar