குஜராத் பால விபத்து- “குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் தண்டிக்கப்படலாம். எங்கள் இழப்பை ஈடுகட்ட முடியுமா?”

ஒற்றைத் தந்தை. வசதி குறைந்த குடும்பம். தரைக் கற்கள் செய்யும் தொழிற்சாலையில் கூலி வேலை. மாத வருமானம் சுமார் 10000

சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக்கொண்டு கடந்த மாதம் புதிதாக மோட்டார்சைக்கிளை வாங்கினார் குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரத்தைச் சேர்ந்த மகேஷ்.

அதில் சுற்றித் திரிவதில் பேரானந்தம் கொண்டார். ஞாயிற்றுக்கிழமை தமது மகனையும் சகோதரரின் மகனையும் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தொங்கு பாலத்திற்கு மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றிருந்தார்.

அவர்கள் பாலத்தில் இருந்தபோது அந்தக் கொடூரம் நடந்தது. தொங்கு பாலம் திடீரென்று அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். மறுநாள் காலை பலரது சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன.

அதில் மகேஷ், அவரது மகன், அவரது சகோதரரின் மகன் மூவரின் சடலங்களும் இருந்தன. செய்தியைக் கேட்டவுடன் பாலத்திற்கு ஓடோடிச் சென்றதாகச் சொன்னார் மகேஷின் மூத்த சகோதரர் ஜக்தீஷ்.

தலைமீது இடி விழுந்தது போலிருந்தது என்று செய்தியிடம் அவர் கூறினார்.

“வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. அரசாங்கம் தனது கடமையைச் செய்கிறது; குற்றஞ்சாட்டபட்டவர்களைத் தண்டிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால், எதனாலும் எங்கள் இழப்பை ஈடுகட்ட முடியாது,”என ஆதங்கப்பட்டார்.

மகேஷின் உழைப்பில் வாங்கிய மோட்டார்சைக்கிளைப் பார்த்துப் பார்த்துக் கதறுகிறார் அவரது சகோதரர். எஞ்சியிருப்பது அது மட்டுமே என்று கூறித் துயரத்தில் வாடுகிறது அந்தக் குடும்பம்.

சம்பவத்தின் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

 

 

 

-smc