கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 50 சதவீத சீட்டுகள் இளைஞர்களுக்குதான்- மல்லிகார்ஜூன கார்கே

2023-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 224 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 1 முதல் 3 வேட்பாளர்களை கட்சி தேர்வு செய்யும்.

காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாராட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் போட்டியிடும் இளைஞர்கள் மற்றும் பெண்களை அடையாளம் காண மாநில காங்கிரஸ் நேர்மையான முயற்சியை மேற்கொள்ளும். இதற்காக மாநில காங்கிரஸ் சார்பில் ஒரு குழு அமைக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் இந்த பட்டியல் மத்திய தேர்தல் குழுவால் பரிசீலிக்கப்படும் என்றார்.

பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:- 2023-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை மதிப்பிடுவதற்காக 3 கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். 224 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 1 முதல் 3 வேட்பாளர்களை கட்சி தேர்வு செய்யும். இந்த 3 பேரில் 50 வயதுக்குட்பட்ட ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார். இதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். அதே நேரத்தில் கார்கேவின் இந்த அறிவிப்பு அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், 68 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் வழங்காமல் இருக்க முடியாது. மேலும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பலர் தற்போதும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். எனவே புதிதாக இளைஞர்களுக்கு சீட் எப்படி ஒதுக்க முடியும் என்றார்.

 

-mm