சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்: 2 மருத்துவர்கள் இடைநீக்கம்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தமது மகளின் மரணத்துக்கான மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது தந்தை ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாணவிக்கு சிகிச்சையளித்த இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமது மகளின் காலில் உள்ள ஜவ்வுதான் கிழிந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் தம் மகள் உயிரிழப்பார் என்று தாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி பிசிக்கல் எஜுகேஷன் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் பிரியா. இவர் மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த 7ஆம் தேதி பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் வலி குறையாததால், பிரியா 8ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அகற்றப்பட்ட கால்

அங்கு பிரியாவின் வலது கால் தசைகள் அழுகிய நிலையில் இருந்ததால் மருத்துவர்களால் கால் அகற்றப்பட்டது.

பெரியார் நகர் மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு காலில் போடப்பட்ட கட்டு மிகவும் இறுக்கமாக இருந்ததால் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, ரத்த நாளங்கள் பழுதாகி மிகவும் அவதிக்கு உள்ளனார் என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் தாம் பிரியாவை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வந்து பார்த்த போது அவர் நலமுடன் இருந்ததாகவும், நேற்று நள்ளிரவுக்கு மேல் பிரியாவுக்கு சிறுநீரகம், ஈரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இன்று காலை 7:15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு அமைத்த மருத்துவ வல்லுநர் குழு பெரியார் நகர் மருத்துவமனை மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என்று கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பிரியாவின் சகோதரர்களில் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், இடமாற்றம் செய்யப்பட்ட இரு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானது ஆனால் கவனக்குறைவாக அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பிரியாவின் உடலைப் பெற மறுத்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வந்த அவரது உறவினர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

மாணவி மரணம் – திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அறுவை சிகிச்சையின்போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சகோதரி பிரியாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வோர் அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவத் துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

அறிவாலயம் அரசு, சகோதரி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்குக் காரணமான இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பேற்று இந்த அரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

-bbc