விஜய் ஹசாரே தொடர் – 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு அணி

உலகளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இது முதல் முறை. இத்தொடரில் தொடர்ந்து 5 சதமடித்து தமிழக கிரிக்கெட் அணி வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன்மூலம் தமிழக அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர். தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்தன.

ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது.

லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும்.

இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-mm