சட்டசபை தேர்தலில் அனல் பறக்கிறது- மோடி, ராகுல் இன்று குஜராத்தில் போட்டி பிரசாரம்

25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் வருகிற 1, 5-ந் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

இதே போல பஞ்சாபை போல குஜராத்திலும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கில் ஆம்-ஆத்மி கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி குஜராத்தில் ‘விஜய் சங்கல்ப் சம்மேளனம்’ என்ற பெயரில் 3 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு கடந்த சனிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

நேற்று ஒரே நாளில் வெராவல், டோராஜி, அம்ரேலி, போடத் ஆகிய 4 கூட்டங்களில் பேசி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் இன்று சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள தரங்காத்திரா மற்றும் பாருட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாம்பசூர், நவ்சாரி ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிகளில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

மோடி பிரசாரத்தின் போது பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை பட்டியலிடுவதோடு, காங்கிரசையும், ராகுல் காந்தியை சாடியும் பேசுவது வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், பிரசாரம் அனல் பறப்பதால் மோடியின் இன்றைய பேரணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருவதால் அவர் குஜராத் பிரசாரத்திற்கு இதுவரை செல்லாமல் இருந்தார். ஏற்கனவே இமாச்சல பிரதேச மாநில தேர்தலில் அவர் பிரசாரம் செய்யாமல் தனது சகோதரி பிரியங்கா காந்தியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தார்.

இது கட்சியினர் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறப்பதை அடுத்து ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரைக்கு இடையே இன்று குஜராத் சென்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

அவர் சூரத்தில் உள்ள மகுவா மற்றும் ராஜ்கோட்டில் நடைபெறும் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரி பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கிய பிறகு ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் அரசியல் பேரணி இது ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் தேர்தலில் ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அதன் பயனாக 1985-க்கு பிறகு காங்கிரஸ் கட்சி அங்கு 77 இடங்களில் வெற்றி பெற்றது. இது பா.ஜ.க.வின் 100 தொகுதி வெற்றியை எட்டவிடாமல் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் ராகுல் காந்தியின் இன்றைய பிரசாரம் அம்மாநில காங்கிரசாருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. குஜராத்தின் தொழில்துறை மையமான சூரத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மகுவா பகுதியில் தான் இன்றைய பேரணி நடைபெற உள்ளது.

ஜி.எஸ்.டி.-க்கு எதிரான போராட்டங்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கை என கடந்த முறை சூரத்தில் போராட்டங்கள் நடைபெற்ற போதும், அங்கு பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது. இந்தநிலையில் தான் சூரத் நகரில் உள்ள ராஜ்கோட் மற்றும் மகுவா ஆகிய இடங்களில் நடைபெறும் இந்த பேரணி காங்கிரசுக்கு திருப்புமுனையாக அமையும் என அம்மாநில காங்கிரசார் கருதுகின்றனர்.

 

-mm