உழவர்களுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப் பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகெங்கும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

விவசாயத்தில் உழவர்களுடன் சேர்ந்து மாடுகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. மாடுகளின் உழைப்பை காலப்போக்கில் மனிதம் மறந்து விட கூடாது,  உழைப்பை அங்கீகரித்து அவற்றை கவுரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூரியனை வழிபட்ட பிறகு அடுத்த நாள் மாடுகளுக்கு பிரத்யேகமாக கொண்டாடப்படுவது தான் மாட்டு பொங்கல்.

மனிதனுக்கு உணவு வருவதற்கு முன், மனிதனுடன் சேர்ந்து மற்றொரு ஜீவனும் தன் உயிரை கொடுத்து உழைத்தால் தான் எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கும். மாடுகளின்றி பல்லயிரக்கணக்கான ஆண்டுகள் விவசாயம் செழித்திருக்க முடியாது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற வரிகளின்படி விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் மாடுகளை போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்நாளில் மாடுகள் மற்றும் கன்றுகள் வசிக்கும் தொழுவம் நன்கு சுத்தம் செய்யப்படுகிறது. பின் மாடுகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளில் வர்ணம் பூசி அவற்றை மேலும் பல விதமாக அலங்கரித்து, சலங்கைகளையும் கட்டி விடுவார்கள். மேலும் மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்பு கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து அலங்கரித்து வழிபடுவார்கள்.

மாடுகளை மட்டுமின்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபடுவார்கள். பல ஊர்களில் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட மாடுகள் சார்ந்த வீர விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

 

 

-ne