14 ஆண்டுகளாக தொடரும் 10 ரூபாய் நாணய வதந்தி- முற்றுப்புள்ளி வைத்த மத்திய ரிசர்வ் வங்கி

பஸ்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்கிற அறிவிப்பு போஸ்டர் ஒட்ட வேண்டும். வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும்.

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. ஆனாலும் 10 ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுப்பதாக புகார் எழுந்தது. இதனால் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை பிறரிடம் இருந்து வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் அதன் நம்பகத் தன்மை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களும், வதந்தியும் பரப்பப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தன.

குறிப்பாக பஸ் கண்டக்டர்கள், கடைக்காரர்கள், சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட அளவிலான நாணய மேலாண்மை குழு கூடி விவாதித்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும். பஸ்களில் இதுதொடர்பாக அறிவிப்பு போஸ்டர் ஒட்ட வேண்டும்.

மேலும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும். வங்கிகளிலும் இது குறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து வங்கிகளும் இணைந்து விளம்பரங்கள் வெளியிட வேண்டும். இதை மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக தொடரும் 10 ரூபாய் நாணய வதந்திக்கு மத்திய ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.

 

-mm