பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் | அனுமதியின்றி திரையிடும் மாணவர்கள்

பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் இல்லை என்று கூறி அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்தும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு) நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிட இருப்பதாக மாணவர் பேரவை தலைவர் அயிஷா கோஷ் அறிவித்தார். இதற்கு பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று கூறிஜேஎன்யு நிர்வாகம் திரையிட தடை விதித்தது. ஆனால் மாணவர்களில் ஒரு பகுதியினர் இதை பொருட்படுத்தாமல் மாணவர் பேரவை அலுவலகம் முன் கூடியிருந்தனர்.

இந்நிலையில் 15 நிமிடங்கள் முன்பாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனினும் பதிவிறக்கமான அப்பதிவை மாணவர்கள் க்யூஆர் குறியீடு உதவியால் தங்கள் கைப்பேசிகள், மடிக்கணினிகளில் காணத் தொடங்கினர்.

இந்நிலையில் இரவு சுமார் 10.30 மணிக்கு பதிவை பார்த்து வந்த மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அயிஷா கோஷ் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏபிவிபி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால் தங்கள் மீதான புகாரை ஏபிவிபி மாணவர்கள் மறுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பல்கலை.நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிபிசி பதிவு முதல்முறையாக திரையிடப்பட்டது. எதிர்ப்பை மீறிபல்கலை.யின் சகோதரத் துவ இயக்கம் எனும் மாணவர் அமைப்பினர் இதை திரையிட்டனர்.

இதுகுறித்து ஏபிவிபி சார்பில்போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.கேரள அரசு சட்ட கல்லூரியிலும் எதிர்ப்புக்கு மத்தியில் இப்பதிவு திரையிடப்பட்டது. இங்கும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநில பல்கலைக்கழகங்களிலும் இப்பதிவு திரையிடப்பட இருப்பதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசின் உத்தரவின்படி, யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து பிபிசி பதிவு நீக்கப்பட்டது. எனினும் இப்பதிவின் வேறுசில வெளிநாட்டு இணையத் தொடர்புகளை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பகிரத்தொடங்கினர்.

ஜனவரி 26-ல் குடியரசு தினத்தன்று, கேரளாவில் மாநில, மாவட்டத் தலைநகரங்களிலும் இப்பதிவை திரையிட இருப்பதாக மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பிபிசியின் பதிவை பாஜகவுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

மத்திய அரசின் உத்தரவின்படி, யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து பிபிசி பதிவு நீக்கப்பட்டது.

 

 

-th