ரிசர்வ் வங்கியும் செபியும் அதானி குழுமத்திடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி குழும விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பினார்.

“பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் நீண்ட காலமாக நெருங்கிய உறவு இருக்கிறது. அதனால், கருப்புப் பணம் ஒழிப்பு குறித்து பேசும் மோடி அரசு, அதானியின் முறைகேடுகளுக்கு கண்ணை மூடிக்கொள்ள முடிவெடுத்துள்ளதா” என்று கேட்டார். மேலும் அவர், “பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி, அதானி குழுமத்தில் ரூ.74,000 கோடி முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன்களில் எஸ்பிஐ-யின் பங்களிப்பு மட்டும் 40 சதவீதம். மோடி அரசு நிதி அமைப்பை ஆபத்தான சூழலுக்குத் தள்ளியுள்ளார்” என்றார்.

அதானி குழுமம் பங்கு முறைகேடு, வரி ஏய்ப்பு, பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி அதிகம் கடன் பெறுதல் உள்ளிட்ட முறை கேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், வெளியிட்டது. இந்த அறிக்கை இந்திய பங்குச் சந்தை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இரண்டே நாட்களில் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்தது. இதனால், அதில் முதலீடு செய்திருந்த எல்ஐசிக்கும் ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

-th