யோகாவும், சிறுதானியங்களும் சுகாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பவை: பிரதமர் மோடி

இந்தியாவால் முன்மொழியப்பட்ட நிலையில், சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கடைப்பிடிக்கும் முடிவை, ஐ.நா. சபை எடுத்து உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். இதனை தொடர்ந்து, 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி பிரதமரான பின்பும் இந்த முறை தொடர்ந்து வருகிறது.

அதன்படி, பிரதமர் மோடியின் வானொலி வழியேயான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இதில் பேசிய பிரதமர் மோடி, உங்களுடன் உரையாடுவது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது என கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசும்போது, இந்த முறை பத்ம விருதுகளை, பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் பழங்குடி சமூகத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் அதிக அளவில் பெற்றுள்ளனர்.

பழங்குடி வாழ்க்கை, நகர வாழ்க்கையில் இருந்து வேறுபட்டது. அதற்கென்று சொந்த சவால்களை கொண்டுள்ளது. இவை எல்லாம் இருந்தபோதும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர். பழங்குடியினரின் மொழிகளான டோடோ, ஹோ, குய், குவி மற்றும் மண்டா ஆகியவை பற்றிய பணிகளில் ஈடுபட்ட பல பெரும் பிரபலங்கள் பத்ம விருதுகளை வென்றுள்ளனர்.

அது நாம் அனைவருக்கும் பெருமைக்கு உரிய விசயம். சித்தி, ஜார்வா மற்றும் ஓன்ஜ் ஆகிய பழங்குடியினரை பற்றிய பணிகளில் ஈடுபட்டவர்கள் இந்த முறை பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார். இதேபோன்று, நமது பாரம்பரிய இசை கருவிகளான சந்தூர், பாம்ஹம், துவிதாரா ஆகியவற்றின் மெல்லிசையை பரவ செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த நபர்கள் இந்த முறை பத்ம விருதுகளை பெற்று உள்ளனர்.

குலாம் முகமது ஜாஸ், மோவா சூ-போங், ரி-சிங்போர் குர்கா-லாங், முனி-வேங்கடப்பா மற்றும் மங்கள் காந்தி ராய் ஆகியோரை பற்றி அனைத்து பகுதிகளிலும் விவாதித்து வருகின்றனர்.
இந்தியாவால் முன்மொழியப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு ஆகியவற்றை கடைப்பிடிக்கும் முடிவை, ஐ.நா. சபை எடுத்து உள்ளது. யோகா, சுகாதாரத்துடன் தொடர்புடையது. சுகாதாரத்தில் சிறுதானியங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த இரண்டை பற்றிய செயல் திட்டங்களிலும், பொதுமக்கள் பங்கு வகித்து வருகின்றனர். இதனால், ஒரு புரட்சி வர இருக்கிறது. மக்கள் பெருமளவில் தங்களது வாழ்வின் ஒரு பகுதியாக யோகா மேற்கொள்வது மற்றும் கட்டுடலுடன் இருப்பது ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இதேபோன்று, சிறுதானியங்களையும் தங்களது வாழ்வில் பெரிய அளவில் அவர்கள் ஏற்று கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.

சிறுதானிய தொழில்முனைவோர்களை பற்றி நீங்கள் கேட்டு அறிந்ததுண்டா? ஒடிசாவில், சிறுதானிய இயக்கத்தின் ஒரு பகுதியாக சுந்தர்கார் என்ற பழங்குடி மாவட்டத்தின் மகளிர் சுய உதவி குழு ஒன்று தற்போது தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் பிற உண்பதற்கான பொருட்களை சிறுதானியங்களில் இருந்து உருவாக்கி வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்டு உள்ள 1,500 பெண்கள், சிறுதானியங்களில் இருந்து குக்கீகள், ரசகுல்லா, குலாப் ஜாமூன் என ஒவ்வொன்றையும் உருவாக்கி வருகின்றனர். சந்தையில் அவற்றின் தேவை அதிகரிப்பால், அந்த பெண்களின் வருவாயும் அதிகரித்து உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

-dt