அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது.
இதனிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பொய்யானது என்றும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது என்றும் அதானி குழுமம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் குறித்து ஒழுங்குமுறை அமைப்புகள் தங்கள் கடமையைச் செய்யும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் விளக்கம் அளித்தது. மேலும் அதிக அளவில் அதானி குழும பங்குகளை வைத்திருக்கும் வங்கிகள் மற்றும் எல்ஐசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
குறிப்பாக தங்கள் முதலீட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தன.
இதுபோல இந்திய பங்குச் சந்தை வாரியமும் (செபி) சந்தையின் போக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது. முறை கேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது செபி உரிய நடவடிக்கையை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர் பங்கு வெளியீட்டுக்காக (எப்பிஓ) விண்ணப்பங்களை பெற்றது. இதனிடையே ஹிண்டன்பர்க் விவகாரம் பூதாகரமானதால், எப்பிஓ-வை ரத்துசெய்வதாகவும் விண்ணப்பதாரர் கள் செலுத்திய பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் அதானி குழுமம் அறிவித்தது.
இது தொடர்பான ஒரு கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “நம் நாட்டில் எத்தனை முறை எப்பிஓ ரத்து செய்யப்பட்டது? இதுபோன்ற சூழலால் எத்தனை முறை இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது?” என கேள்வி எழுப்பினார்.
வங்கிகளுக்கு சிக்கல்: அதானி குழும பங்குகள் சரிவால் இந்திய வங்கிகளுக்கு சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், “இந்திய வங்கி கட்டமைப்பு நிலையாக உள்ளது. வங்கிகள் ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகின்றன” என கூறியிருந்தார். இதைத்தான் அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
-th