தொழிலதிபர் கௌதம் அதானியுடனான தொடர்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் கடுமையான தாக்குதலைத் தொடுத்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்து வருவது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3,500 கிமீ பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்த பின்னர், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றினார்.
அப்போது , பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் அதானியின் வணிக சாம்ராஜ்யத்திற்கு உதவுகிறார் என்று குற்றம் சாட்டினார். அவர், “சூரிய சக்தி, காற்றாலை ஆற்றல் போன்ற எந்தத் தொழிலிலும் அதானி ஜி ஒருபோதும் தோல்வியடைவதில்லை. எனது யாத்திரையின் போது அதானி எப்படி பல துறைகளில் இத்தகைய வெற்றியைப் பெற்றார், பிரதமருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள்.
பிரதமர் மோடி சென்ற நாடுகளில் எல்லாம் அதானி அதிகளவில் ஒப்பந்தங்களைப் பெற்றார். 2014 மற்றும் 2022 க்கு இடையில் அதானியின் நிகர மதிப்பு 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலராக எப்படி அதிகரித்தது என்று மக்கள் என்னிடம் கேட்டனர். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது 600-வது இடத்தில் இருந்த அதானி கடந்த ஆண்டு உலகின் இரண்டாவது பணக்காரர் ஆனார்.
விமான நிலையத்தை மேம்படுத்துவதில் அனுபவம் இல்லாதவர்களிடம் அதற்கான பணியை ஒப்படைக்கக் கூடாது என ஒரு விதி உள்ளது. ஆனால், இந்த விதியை மத்திய அரசு மாற்றுகிறது. அதானி வசம் 6 விமான நிலையங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. நாட்டின் மிகவும் லாபகராமான மும்பை விமான நிலையமும் அவருக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோல், பாதுகாப்புத் துறையில் அதானிக்கு எவ்வித முன் அனுபவமும் இல்லை. ஆனால், 126 போர் விமான உற்பத்திக்கான ஒப்பந்தம் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் மூலம் அதானிக்கு வழங்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். மேலும், அதானியுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தையும் ராகுல் காந்தி அவையில் காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பில் கடுமையான எதிர்வினையாற்றினார்கள். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் காட்டுமிராண்டித்தனமானது மற்றும் பொறுப்பற்றது என்று மத்திய அமைச்சர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, “காட்டுத்தனமான குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள், ஆதாரம் கொடுங்கள். நீங்கள் இப்போது ஒரு மூத்த எம்.பி. நீங்கள் பொறுப்புடன் பேச வேண்டும். நீங்கள் பாராளுமன்றத்தில் தீவிரமாக இருப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் வெளியே சொல்லலாம்” என்று கூறினார்.
ஹிண்டன்பர்க்-அதானி குழும சர்ச்சை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதால், நடப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன
-kh