ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியா எந்த முயற்சி எடுத்தாலும் வரவேற்போம்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கருத்து

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த பிரதமர் மோடி எந்த முயற்சி எடுத்தாலும் அதை அமெரிக்கா வரவேற்கும்’’ என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகம் கூறியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் வந்திருந்தபோது, அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, ‘‘இன்றைய யுகம் போருக்கானது அல்ல. இதுகுறித்து நான் ஏற்கெனவே பேசியுள்ளேன். அமைதிப் பாதையில் எப்படி செல்லலாம் என்பதற்கான வாய்ப்புகள் தற்போது உள்ளன’’ என தெரிவித்தார். இதே கருத்தை உஸ்பெகிஸ்தான் சாமர்கண்ட் நகரில் நடந்த கூட்டத்திலும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தோனேஷியாவின் பாலித் தீவில் ஜி-20 கூட்டறிக்கையில், இந்த கருத்து இடம் பெற்றிருந்தது. பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை உலக நாடுகள் வரவேற்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ரஷ்யா- உக்ரைன் போருக்கு அதிபர் புதின்தான் காரணம். அவரால் இப்போது கூட போரை நிறுத்த முடியும். ஆனால், அவர் தொடர்ந்து உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறார். இரு நாடுகள் இடையேயான விரோதம் முடிவுக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தீர்மானிக்க வேண்டும்.

இந்தப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் முயற்சிக்கிறார். ஆனால், போரை நிறுத்த புதின் விரும்பாததால், நாங்கள் உக்ரைனுக்கு ராணுவ உதவி அளிக்க வேண்டியுள்ளது. பிரதமர் மோடியால், புதினை சமாதானம் செய்ய முடியும். இதுகுறித்து பிரதமர் மோடியை மீண்டும் பேசும்படி கூறுவோம். உக்ரைன் போரை நிறுத்த அவர் எந்த முயற்சி எடுத்தாலும், அதை அமெரிக்கா வரவேற்கும். இவ்வாறு ஜான் கிர்பி கூறினார்.

 

 

-th