இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வலுப்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2023-ம் ஆண்டுக்கான விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார். இதில் மத்திய மந்திரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 80 நாடுகள் கலந்துகொள்ள உள்ளன.
விமான கண்காட்சியையொட்டி பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள ஓட்டலில் அமெரிக்க முக்கிய பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. இதில், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணை பாதுகாப்பு செயலர் ஜெடிடியா பி.ராயல், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ், மேஜர் ஜெனரல் ஜூலியன் சி.சீட்டர், விமானப்படையின் உதவி துணை துணை செயலாளர் ரியர் அட்மிரல் மைக்கேல் பேக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காலநிலை மாற்றம் இந்த கூட்டம் முடிந்ததும் அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், “இந்தியாவும் அமெரிக்காவும் சுதந்திரமான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வலுப்படுத்த பல வழிகளில் இணைந்து செயல்படுகின்றன. அங்கு நமது ஜனநாயகம் செழிக்க முடியும். கூட்டாளர்களாக, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய தொற்றுநோய்களுக்கு எதிராக தயார்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இணைய சவால்களில் ஒத்துழைத்தல், தரமான உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நிலையான வினியோக சங்கிலிகளை உறுதி செய்தல், விண்வெளி கூறுகள் முதல் குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்கள்) வரை முக்கியமான தொழில்நுட்பங்களில் எங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறோம் என்று கூறினார். திட்டங்களில் முதலீடு முதன்மை துணை பாதுகாப்பு செயலர் ஜெடிடியா பி.ராயல் கூறுகையில், பாதுகாப்புத் துறையின் மூத்த அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் அமெரிக்க குழுவுக்கு தலைமை தாங்குகிறார்கள். இந்த நெருக்கமான கூட்டாண்மை இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிபுணத்துவத்தின் முக்கியமான பரிமாற்றங்களை செயல்படுத்தியது.
அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் பொறியியல் மையங்கள் மற்றும் உற்பத்தி மையங்களை நிறுவியுள்ளன. மேலும் இந்தியாவின் நம்பமுடியாத திறமையான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களைப் பயன்படுத்தி அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக மையங்களில் முதலீடு செய்துள்ளன என்றார்.
அமெரிக்க விமானங்கள் பெங்களூரு விமான கண்காட்சியில் அமெரிக்க விமானப்படையின் (யூ.எஸ்.ஏ.எப்.) முன்னணி போர் விமானங்களில் ஒன்றான ‘எப்-16’ பைட்டிங் பால்கன், எப்/ஏ-18இ மற்றும் எப்/ஏ-18எப் சூப்பர் ஹார்னெட், அமெரிக்க கடற்படையின் மிகவும் மேம்பட்ட முன்னணி கேரியர் ஆகியவை பங்கு பெறுகின்றன.
-dt