வங்கதேசத்தில் இருந்து படகு மூலம் இந்தியா வந்த 69 ரோகிங்கியா அகதிகள்

வங்கதேசத்தில் முகாமில் தங்கி இருந்த மியான்மர் நாட்டு ரோகிங்கியா அகதிகள், அங்கிருந்து படகு மூலம் இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுக்கு வந்துள்ளனர்.

மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோகிங்கிய முஸ்லிம்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு 2 வாரங்களுக்கு முன்பு வங்கதேசம் வந்த ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு அங்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களில் 69 பேர் பெற்றோரின் ஆசீர்வாதம் என்ற பெயர் கொண்ட படகு மூலம் இந்தோனேஷியாவுக்குச் செல்ல புறப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் பயணித்த படகு வானிலை காரணமாக திசை மாறியதோடு, எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டதால், அது அந்தமான் நிகோபார் தீவில் கரை ஒதுங்கி உள்ளது. இதையடுத்து, அங்குள்ள இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர். இவர்களில் 19 பேர் ஆண்கள் என்றும் 22 பேர் பெண்கள் என்றும், 28 பேர் குழந்தைகள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

-th