லித்தியம் கண்டுபிடிப்பு: காஷ்மீர் வளங்களை திருட விடமாட்டோம் – மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் லித்தியம் கனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் அந்த பகுதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லித்தியம் கனிமம் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் முக்கிய மூலப்பெருளாகும். செல்போன், லேப்டாப், டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியின் முக்கிய மூலப்பொருளாக லித்தியம் கனிமம் உள்ளது. லித்தியம் கனிமத்தை 100 சதவிகிதம் இறக்குமதி செய்யும் இந்தியா தற்போது காஷ்மீரில் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டதால் அது சார்ந்த இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் வளங்களை திருடவிடமாட்டோம் என்று மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மக்களின் பாசிச எதிர்ப்பு முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், எந்த சூழ்நிலையிலும் ஜம்மு-காஷ்மீரின் வளங்களை திருட, சுரண்ட விடமாட்டோம். இந்த வளங்கள் மக்களுக்கு சொந்தமானது. அது ஜம்மு-காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். மோசமான இந்துத்துவ திருடர்கள் எங்கள் வழங்களை திருட அனுமதியில்லை. ஜம்மு-காஷ்மீருக்கு நுழைய நினைக்கும் இந்திய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். ஜம்மு-காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவுக்குள்ளும் தாக்குதல் நடத்துவோம் என்று அந்த பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

-dt