நோயில்லா சான்றிதழ் வழங்க காலதாமதம் ஆவதால் மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி பாதிப்பு

அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது 3 வகையான நோயில்லா சான்றிதழை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே, முட்டைகள் இறக்குமதி செய்ய முடியும் என மலேசியா அரசு அறிவித்துள்ளது.

அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. தற்சமயம் முட்டை ஏற்றுமதி தொழிலில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் 2-வது இடத்திலும், முட்டை ஏற்றுமதியில் முதலிடத்திலும் உள்ள, நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1000-க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன.

இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. பண்ணைகளில் உற்பத்தி ஆகும் முட்டைகளின் ஒரு பகுதி, மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், சைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிவருகின்றன. இந்த நாடுகளுக்கு தற்போது மாதந்தோறும் சுமார் 150 கண்டெய்னர் முட்டைகள் ஏற்றுமதி ஆகி வருகிறது.

தற்போது முதன்முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல் பகுதியில் இருந்து விமானம் மூலம் முட்டைகள் மலேசியா நாட்டிற்கு ஏற்றுமதி ஆக தொடங்கியது. மலேசியா நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும் அங்கு தேவை மற்றும் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் பகுதிகளில் இருந்து அதிகளவில் முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. முதன் முறையாக மலேசியா, இந்தியாவில் இருந்து அதிக அளவு முட்டைகளை இறக்குமதி செய்கிறது.

மேலும், 2023 பாதியில் மலேசியாவுக்கான இந்தியாவின் முட்டை ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. வரும் மாதங்களில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல்லில் இருந்து முட்டைகளை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இது குறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் கூறியதாவது:- நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 10 கண்டெய்னர் மூலம் 50 லட்சம் முட்டைகள் முதன் முதலாக மலேசியாவிற்கு ஏற்றுமதி ஆகி உள்ளது.

தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வருகிறது. நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முட்டை தரமாகவும் எடையும் சரியாக உள்ளதால் அதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் முட்டை விலை குறைவாகவே உள்ளது. இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய மலேசியா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கோழிகளைத் தாக்கும் பவுல் காலரா, சால்மனலா பேக்டீரியா ஆகிய நோய் உள்ளிட்ட 3 வகையான நோயில்லா சான்றிதழை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே, முட்டைகள் இறக்குமதி செய்ய முடியும் என மலேசியா அரசு அறிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு இந்த சான்றிதழ் வழங்க கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் கடந்த 40 நாட்களாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை விரைவில் வழங்குவதற்கு மத்திய கால்நடைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், நாமக்கல் பகுதியில் இருந்து மலேசியாவிற்கு மாதந்தோறும் சுமார் 50 கண்டெய்னர்கள் முட்டைகள் ஏற்றுமதி ஆக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

-mm