பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்

இன்றில் இருந்து சரியாக ஓராண்டுக்கு முன்பு, 2022 பிப்ரவரி 18 அன்று, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான நீண்ட கால, பயன்பாடுள்ள உறவில் சிறப்புமிக்க புதிய அத்தியாயம் தொடங்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முஹமது பின் சையீத், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே விரிவான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதாரப் பங்களிப்பு ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பிராந்திய நாடு ஒன்றுடன் இந்தியா முதல் முறையாக இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. இது மிகவும் முக்கியமானது மட்டுமின்றி இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே வெளிப்படையான பொருளாதார அதிகாரம் மற்றும் ஒருங்கிணைப்பின் மீதான பகிரப்பட்ட நம்பிக்கையைப் பிரதிபலிப்பதுமாகும். 80 சதவீதத்துக்கும் அதிகமான உற்பத்திப் பொருட்களுக்கு வரி நீக்கம் அல்லது வரி குறைப்பு, சேவைகள் பிரிவில் ஏற்றுமதியை அதிகரித்தல், முன்னுரிமை துறைகளில் முதலீட்டு வாய்ப்பை அதிகரித்தல், சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஒத்துழைப்புக்கான வாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றில் புதிய சகாப்தத்தை நாம் சிந்தித்திருக்கிறோம்.

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை, அதிகரித்து வரும் நடுத்தர வகுப்பினர் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழலை கொண்டுள்ள, உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாட்டுடன் தடையில்லா வர்த்தகம் செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பகுதியில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான நுழைவு வாயிலாக இந்த ஒப்பந்தம் உள்ளது. கடந்த 2022-ல் எண்ணெய் அல்லாத இருதரப்பு வர்த்தகம் 49 பில்லியன் டாலரை எட்டியிருந்தது. இது 2021-ம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். வரும் 2030-ஆண்டுக்கான இலக்கை எட்டுவதற்கு இது முக்கியமான முன்னேற்றமாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி 26 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2022-ல் 11,000 புதிய இந்திய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக துபாய் தொழில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 83,000 ஆகியுள்ளது. இது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும். அடுத்த 5 ஆண்டுகளில் சீனா நீங்கலாக, ஆசியான் மற்றும் தெற்காசிய பிராந்திய நாடுகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சிக்கு உலகத்துக்கு வழிகாட்டும்.

ஓராண்டுக்கு முன் ஆக்கப்பூர்வமான, சாத்தியக் கூறுகள் நிறைந்த உணர்வுடன் இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் ஒருங்கிணைந்து மகத்தான வளர்ச்சி மற்றும் வளத்துக்கான பாதையை வகுத்தன. ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா இடையேயான விரிவான பொருளாதாரப் பங்களிப்பு ஒப்பந்தம் என்பது நமது பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக பார்க்கப்படுவது மட்டுமின்றி எல்லை தாண்டிய ஒத்துழைப்புக்கு நீடித்த முன்மாதிரியாகவும் விளங்குகிறது.

 

 

-th