வரி ஏய்ப்பில் ஈடுபட்ட பிபிசி நிறுவனம் – விதிகளை மீறியதாக புகார் எழுந்ததால் ஆய்வு என வருமான வரித் துறை விளக்கம்

வருமான வரி சட்ட விதிகளை மீறியதாக புகார் எழுந்ததன்பேரிலேயே, பிபிசி அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது என்று வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 14, 15, 16-ம் தேதிகளில் ஆய்வு நடத்தினர்.

இதுதொடர்பாக மத்திய வருமான வரித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வருமான வரி சட்டம் 1961 பிரிவு 133ஏ விதிகளை மீறியிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, டெல்லி, மும்பையில் உள்ள சர்வதேச செய்தி நிறுவன (பிபிசி) அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த நிறுவனம் ஆங்கிலம், இந்தி மற்றும் பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. ஆங்கிலம் தவிர்த்து இந்திய பிராந்திய மொழிகளின் செய்தி சேவையில் பிபிசி ஈட்டிய விளம்பர வருவாயில் முரண்பாடுகள் உள்ளன. உண்மையான வருவாய்க்கு ஏற்ப அந்த நிறுவனம் வரி செலுத்தவில்லை. பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

வெளிநாடுகளை சேர்ந்த தற்காலிக ஊழியர்களுக்கு பிபிசி நிறுவனம் ஊதியம் வழங்கியிருக்கிறது. சட்டவிதிகளின்படி இந்த ஊதியத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால்,பிபிசி முறையாக வரி செலுத்தவில்லை. வரிஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிபிசி ஊழியர்கள் அளித்த வாக்குமூலம் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட உள்ளன.

வருமான வரித் துறை ஆய்வின்போது பிபிசி நிறுவனம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனினும், அதன் செய்தி சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆய்வு நடத்தப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய வருமான வரித் துறையின் ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். எப்போதும்போல நடுநிலையோடு செய்திகளை வெளியிடுவோம். எவ்வித அச்சமும் இன்றி செய்திகளை மக்களுக்கு அளிப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1970-ல் பிபிசிக்கு தடை

கடந்த 1967-1969 காலகட்டத்தில் பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் லூயிஸ் இந்தியாவின் மதராஸ் (சென்னை), கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் பயணம் செய்து படப்பிடிப்பை நடத்தினார். அதன் அடிப்படையில் 2 ஆவணபடங்களை வெளியிட்டார். இந்தியாவின் வறுமை, நீலகிரி பழங்குடி மக்களின் சாதிய அமைப்பு முறைகளை மையப்படுத்தி ஆவண படங்கள் இருந்தன. இவை பிபிசி தொலைக்காட்சியில் பல்வேறு பாகங்களாக ஒளிபரப்பாகின.

இந்த ஒளிபரப்பை நிறுத்துமாறு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வலியுறுத்தினார். இதை பிபிசி ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த 1970-ல் இந்தியாவில் பிபிசியை தடை செய்து இந்திரா காந்தி உத்தரவிட்டார். 2 ஆவணப் படங்களும் முடக்கப்பட்டன. இதன் காரணமாக, இந்தியாவில் பிபிசி சேவை 2 ஆண்டுகள் முடங்கியது. இதுதொடர்பாக 1970-ல் மக்களவையில் நீண்ட விவாதம் நடந்தபோது, இந்திரா காந்தியின் நடவடிக்கைக்கு பாரதிய ஜன சங்கம் (பாஜக) முழு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

-th