இந்தியப் பிரிவினை பற்றிய அருங்காட்சியகம் – டெல்லி அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை அமைக்கிறது

நாடு பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இடம்பெயர்ந்தனர்.

பிரிவினையின்போது எல்லைப் பகுதிகளில் கலவரம் உருவாகி சுமார் 10 லட்சம் உயிரிழப்பும் ஏற்பட்டது. இச்சூழலை நினைவு கூரும் வகையில் டெல்லியில் ஓர் அருங்காட்சியகம் அமைகிறது.

டெல்லி அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை சார்பில், அம்பேத்கர் பல்கலைக்கழக வளாகத்தில் இது அமைக்கப்படுகிறது. இந்த கல்வி வளாகத்தில், முகலாய மன்னர் ஷாஜஹானின் மூத்த மகன் தாராஷிகோவின் பெயரில் 1643-ல் ஒரு நூலகம் அமைக்கப் பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த தாராஷிகோ நூலகம், அரசு உயரதிகாரி ஒருவரின் குடியிருப்பாக மாறியது. பிறகு, பள்ளி, பாலிடெக்னிக் என மாறி கடைசியில் டெல்லி மாநில தொல்பொருள் ஆய்வு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இதையே தற்போது அருங்காட்சியகமாக டெல்லி அரசு மாற்றி வருகிறது.

இந்தியப் பிரிவினையை நினைவுகூரும் குடியிருப்புகள், ரயில்கள், அகதி முகாம்கள் உள்ளிட்ட பலவற்றின் முக்கியப் புகைப்படங்கள் இதில் இடம் பெறுகின்றன. அப்போதைய முக்கிய கடிதங்கள், சான்றிதழ்கள், துணிகள், ஆங்கிலேயர்களுக்கு 1942-ல்கைகளால் தயாரித்து அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் போன்றவையும் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

பிரிவினையின்போது பாதிக்கப் பட்ட குடும்பங்களின் குரல் மற்றும் காட்சிப் பதிவுகளும் ஒலி, ஒளி காட்சிகளாக பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறும்போது, ‘‘பிரிவினைக்கு பிறகு டெல்லியில் புதிதாக லாஜ்பத் நகர், சி.ஆர்.பார்க், பஞ்சாபி பாக் ஆகியவை உருவாகின. இவற்றையும் நினைவுகூரும் இந்தப் அருங்காட்சியகம் அமைவதற்கு தாராஷிகோ நூலக கட்டிடத்தை விட்டால் வேறு சிறந்த இடம் டெல்லியில் இல்லை” என்றார்.

பிரிவினை தொடர்பான ஓர் அருங்காட்சியகம் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிலும் உள்ளது. இதை அமைத்த கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய அறக்கட்டளை, டெல்லிஅருங்காட்சியத்தை அமைப்ப திலும் உதவுகிறது.

1947 ஆகஸ்ட் 14-ல் நம் நாட்டிலிருந்து பிரிந்தது பாகிஸ்தான் மட்டுமல்ல. அரசியல் காரணங்களுக்காக நடந்த இந்த பிரிவினையால் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான உறவுகளும் பிரிந்தன. இரு நாடுகளும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என பஞ்சாபில் சில பொதுநல அமைப்புகள் இன்றும் செயல்பட்டு வருகின்றன.

இப்பிரிவினையில், குறைந்த பட்சமாக 6 மாதங்களில் 10 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்த அளவுக்கு வேறு எங்கும் நிகழவில்லை என கூறப்படுகிறது.

 

 

-th