மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்களுடன், ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்களுடன் ‘ஹைபிரிட்’ ராக்கெட் செங்கல்பட்டு அருகில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவ சமூகத்தைச் சேர்ந்த 200 மாணவர்கள், பழங்குடி இன மாணவர்கள் 60 பேர், மராட்டிய மாநிலத்தில் இருந்து மும்பையின் 20 மாணவர்கள், நாக்பூரின் 10 மாணவர்கள், பர்பானி மாவட்டத்தின் அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் என 5 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கிறவர்கள் ஆவார்கள். இந்த மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அந்த பயிற்சியைப் பெற்ற மாணவர்கள், 150 சிறிய ரக செயற்கைக்கோள்களை உருவாக்கினார்கள். இந்த செயற்கைக்கோள்கள் ‘பைக்கோ-செயற்கைக்கோள்கள்’ என அழைக்கப்படுகின்றன. இவை 1 கிலோவிற்கும் குறைவான எடை கொண்டவை. இந்த ராக்கெட்டுகளை நேற்று ஏவ திட்டமிடப்பட்டது.

அதன்படி மாணவர்கள் தயாரித்த 150 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு ‘ஹைபிரிட்’ ராக்கெட், செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் இருந்து நேற்று காலை 8.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது நாட்டின் முதல் ‘ஹைபிரிட்’ ராக்கெட் திட்டம் ஆகும். ‘ஹைபிரிட் ராக்கெட்’ என்பது கலப்பின உந்துசக்தி ராக்கெட் ஆகும்.

இது திட மற்றும் திரவம் அல்லது வாயு உந்து சக்திகளை இரு வெவ்வேறு கட்டங்களில் பயன்படுத்துவதாகும். தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்களுடன் ‘ஹைபிரிட் ராக்கெட்’ விண்ணில் ஏவப்பட்டதை தெலுங்கானா-புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் பல்வேறு பிரமுகர்கள் நேரில் பார்த்தனர். டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர், “நாட்டின் முதலாவது ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் ஏவும் திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது பாராட்டுக்குரியது” என குறிப்பிட்டார்.

மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, “மாணவர்கள் தயாரித்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதில் 150 மாதிரி செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு இருந்தன. சோதனை முறையில் விண்ணுக்கு செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் 2 நிலைகளை கொண்டது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமார் 10 கிலோ மீட்டர் உயரம் சென்று மீண்டும் கடலில் விழுந்தது. செயற்கைக்கோள்கள், ராக்கெட் கடலில் விழும் வரை செயல்பட்டன. மாணவர்களுக்கு இது ஒரு அனுபவத்தை தந்து உள்ளது.

அவர்களது திறமை மேலும் வெளிப்படும்” என குறிப்பிட்டார். வெற்றிகரமாக ராக்கெட் ஏவப்பட்ட நிகழ்ச்சியில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ், அறங்காவலர் லீமா ரோஸ், ‘ஸ்பேஸ்ஜோன் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் மேகலிங்கம், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் அண்ணன் மகள் ஏ.பி.ஜே. எம்.நஜீமா மரைக்காயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மார்ட்டின் அறக்கட்டளை, ‘ஸ்பேஸ் ஜோன் இந்தியா’ நிறுவனம் மற்றும் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

 

-dt