மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உலா – லாகூர் நிகழ்ச்சியில் ஜாவேத் அக்தர் குற்றச்சாட்டு

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்று பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குற்றம்சாட்டி உள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் சமீபத்தில் இலக்கிய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய அக்தர், பாகிஸ்தானுக்கு அதன் கோர முகத்தை கண்ணாடியில் காட்டுவது போல் ஒரு கருத்தைக் கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்குறித்து பேசிய அக்தர், “பாகிஸ்தான் மீது இந்தியர்களுக்கு கோபம் ஏற்பட காரணம் உள்ளது.பாகிஸ்தான் பாடகர் நுஸ்ரத் உள்ளிட்டோரின் இசைக் கச்சேரிகளை நாங்கள் இந்தியாவில் நடத்துகிறோம். ஆனால், இந்தியாவின் லதா மங்கேஷ்கரின் கச்சேரிகளை பாகிஸ்தான் ஒருபோதும் நடத்தியதில்லை” என கூறினார். பார்வையாளர்கள் இதை ஆமோதிக்கும் வகையில் கைதட்டி கோஷம் எழுப்பினர்.

26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்து பேசும்போது, “நான் மும்பையிலிருந்து வருகிறேன். மும்பை தாக்குதல் பற்றி அனைவருக்கும் தெரியும். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நார்வேயிலிருந்தோ, எகிப்திலிருந்தோ வரவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் இன்னமும் உங்கள் (பாகிஸ்தான்) நாட்டில்தான் சுதந்திரமாக உலா வருகிறார்கள். அவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள கோபம் இந்தியர்களின் இதயத்திலிருந்து நீங்க வேண்டுமானால், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீங்கள் வலியுறுத்த வேண்டும்” என்றார்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல் மார்க்கமாக மும்பையில் ஊடுருவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள், ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டவர் உட்பட166 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட ஒரு தீவிரவாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத், ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டோருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்த வேண்டும்.

 

 

-th