ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டுவந்த தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.

இந்த சூழலில் உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகளால் வரைவுத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நா. ஒப்பந்தத்தின்படி உக்ரைனில் விரிவான, நியாயமான, நீடித்த அமைதிக்கான சூழலை விரைவில் உருவாக்குவது தொடர்பான இந்தத் தீர்மானத்தின் மீது விவாதமும் நடைபெற்றது.

இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, “ஐ.நா. விதிகள், சர்வதேச சட்ட விதிகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதன்காரணமாக பிராந்திய அமைதி சீர்குலைந்துள்ளது. சர்வதேச அளவில் பதற்றம் எழுந்திருக்கிறது. போர் என்பது மிகப்பெரிய பிரச்சினை. எந்தவொரு பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காண முடியாது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா: விவாதத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியதில் ஆரம்பித்து ஐ.நா.வின் பொதுச் சபை, பாதுகாப்பு கவுன்சில், மனித உரிமைகள் கவுன்சில் எனப் பல அங்கங்களிலும் ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுவிட்டன. ஆனால் இந்தியா பல்வேறு தருணங்களிலும் உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்தே உள்ளது. ஆனால், வெறுப்பை விடுத்து இருதரப்பும் உடனடியாக போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுகள் ரீதியாக பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா அமைதி, பேச்சுவார்த்தை, தூதரக வியூகங்கள் பக்கம் நிற்கிறது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

-th