நாடு முழுவதும் என்ஐஏ சோதனை – 6 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கைது

என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21-ம் தேதி டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் யூனியன் பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 76 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானா, பாம்பிகா உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து என்ஐஏ செய்தித் தொடர்பாளர் டெல்லியில் நேற்று கூறியதாவது: என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்ட ரவுடி கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆவர்.

சோதனையின்போது 9 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.1.5 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டன. முக்கிய ஆவணங்கள், கணினி, லேப்டாப், செல்போன், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் ரவுடிகள் பாகிஸ்தான், கனடா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்து இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாத குழுக்களுக்கு ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் செயல்படும் சமூகவிரோத கும்பல்களை கூண்டோடு அழிக்க என்ஐஏ திட்டமிட்டுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ரவுடிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு என்ஐஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 

 

-th