தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்: இலங்கை அரசிடம் விசாரணை கோரிய இந்திய தூதரகம்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீதும், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 11 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும், நடவடிக்கை கோரியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பேச்சுவார்த்தை மூலமே தீர்வு: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

மேலும், தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், இனிமேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.

இந்தியா – இலங்கை மீனவர்கள் விவகாரம் வாழ்வாதாரம் தொடர்பானது. இதனை மனிதாபிமான முறையில் இருநாட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

-th