3 மாநில தேர்தல் முடிவுகள் | திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி

திரிபுராவில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், இழுபறி நீடிக்கிறது.

கடந்த மாதம் 16-ம் தேதி திரிபுராவிலும், 27-ம் தேதி மேகாலயா, நாகாலாந்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 வடகிழக்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 55 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி-யும் போட்டியிட்டன. இதில் பாஜக 32 தொகுதிகளிலும், ஐபிஎப்டி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.

நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிபிபி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் என்டிபிபி 25, பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி ஆட்சியைld தக்க வைத்துள்ளது. நாகாலாந்து முதல்வரும், என்டிபிபி மூத்த தலைவருமான நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வராகhd பதவியேற்க உள்ளார்.

மேகாலயாவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சோகியோங் தொகுதியில் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததால், அந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதர 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11, காங்கிரஸ் 5, தேசியவாத காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. பாஜகவுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மேகாலயாவில் இழுபறி நீடிக்கிறது.

அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள தேசிய மக்கள் கட்சி மீண்டும் பாஜக மற்றும் இதர பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேகாலயா முதல்வரும், தேசிய மக்கள் கட்சித் தலைவருமான கன்ராட் சங்கா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆதரவு கேட்டிருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுகள்: மகாராஷ்டிராவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் கஸ்பா பெத் தொகுதியில் காங்கிரஸும், சின்ச்வாட் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன.

மேற்குவங்கத்தின் சாகர்திகி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், இந்த தொகுதியில் ஆளும் திரிண மூல் காங்கிரஸ் தோல் வியைத் தழுவியது.

ஜார்க்கண்டின் ராம்கர் தொகுதியில், அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் வெற்றி பெற்றது. அருணாச்சல பிரதேசத்தின் லும்லா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.

 

 

-th