குஜராத் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடியானதால் டெல்லியில் அரசு வீட்டை காலி செய்தார் ராகுல்

குஜராத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதனால் டெல்லி துக்ளக் தெருவில் ராகுல் கடந்த 2005-ம் ஆண்டு முதல் குடியிருந்த 12-ம் எண் கொண்ட அரசு வீட்டை ஏப்ரல் 22-ம் தேதிக்குள் காலி செய்யும்படி மக்களவை வீட்டு வசதிக் குழு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை, சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து டெல்லியில் வசித்த அரசு வீட்டில் இருந்த பொருட்கள், நேற்று முன்தினம் மாலை லாரி மூலம் சோனியா காந்தி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. ராகுல் காந்தி மற்றும் அவரது தங்கையும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி ஆகியோர் அரசு வீட்டுக்கு நேற்று காலை இரு முறை வந்து சென்றனர். அதன்பின் வீட்டு சாவி நேற்று மாலை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள தாய் சோனியா காந்தி வீட்டில் குடியேறுவார் என ராகுல் காந்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

-th