கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறில் காயமடைந்த சந்தீப் என்பவரை சிகிச்சைக்காக போலீஸார் நேற்று முன்தினம் அழைத்து சென்றனர்.
அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்தனா தாஸ் (23) என்பவரை குத்தி கொலை செய்தார். இச்சம்பவத்தை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க ஏதுவாக புதிய சட்டத்தை அரசு உடனே இயற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய சட்டம்
இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்நிலைக் குழுவின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய், சுகாதாரம், சட்டம் மற்றும் மருத்துவக் கல்வி ஆகிய துறை செயலாளர்கள், காவல் துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
-th