கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு தவறான சிக்னலே காரணம் – முதல் கட்ட விசாரணையில் தகவல்

தவறான சிக்னலால்தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது என்பது ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று முன்தினம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்குரயில், பெங்களூரு யஷ்வந்த்பூர்-ஹவுரா ரயில்கள் மோதிக் கொண்டதில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த பயங்கர விபத்து எப்படி நடந்தது என்ற விவரம் ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோரமண்டல் ரயில் பாலசோர் நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பாஹாநாகாவுக்கு முன்பாக உள்ள வனப்பகுதி அருகே ஆளில்லாத சிக்னலில் பச்சை சிக்னல் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில விநாடிகளிலேயே அந்த பச்சை சிக்னல், சிகப்பு சிக்னலாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரயில் இன்ஜினில் இருக்கும் டிரைவர் பார்க்கும் போது அதில் பச்சை சிக்னல் இருந்துள்ளது. இதனால்தான் அவர் ரயிலை வேகமாக இயக்கி முன்னே சென்றிருக்கிறார். அப்போதுதான் எதிரே வந்த சரக்கு ரயிலும், கோரமண்டல் ரயிலும் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.

அதாவது, அந்த சிக்னலில் சிகப்பு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி இருப்பார். அந்த நேரத்தில் சரக்கு ரயில் வேறு தண்டவாளத்தில் சென்றிருக்கும். ஆனால் சில நொடிகள் காட்டப்பட்ட பச்சை சிக்னலால்தான் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏன் அந்த நேரத்தில் சில விநாடிகள் மட்டும் பச்சை சிக்னல் காட்டப்பட்டது. பச்சை நிற சிக்னலை வேண்டுமென்றே யாரேனும் போட்டு விட்டார்களா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை சிக்னல் ஒளிர்ந்ததா என்பது குறித்து ரயில்வே போலீஸாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் மனிதத் தவறு காரணமாக விபத்து நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான முதல் கட்டஅறிக்கையை ரயில்வே மூத்த அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.

 

 

-th