நியாயமற்ற முடிவுகள் வழங்கப்பட்டால் போராடுவேன் – இகோர் ஸ்டிமாக்

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

இந்த ஆட்டத்தின்போது இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கிற்கு, ரெஃப்ரீ பிரஜ்வால் சேத்ரி, ரெட்கார்டு வழங்கினார். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பந்து ஆடுகள லைனுக்கு வெளியே வந்தது. அதை பாகிஸ்தான் அணியின் டிபன்டர் அப்துல்லா இக்பால், எடுத்து த்ரோ செய்ய முயன்றார். அப்போது லைனுக்கு வெளியே இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், அப்துல்லா இக்பாலின் கைகளில் இருந்த பந்தை தட்டிவிட்டார்.

டச் லைனை பந்து கடந்த போது கடைசியாக பந்து எந்த வீரரின் கால்களுடன் தொடர்பில் இருந்தது என்பதை ரெஃப்ரீ சரிபார்க்க வேண்டும் என இகோர் ஸ்டிமாக் கோரிக்கை வைத்தார். நிலைமையை ஆய்வு செய்த ரெஃப்ரீ, இகோர் ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டு வழங்கினார்.

இந்நிலையில் போட்டியின் போது நியாயமற்ற முடிவுகள் வழங்கப்பட்டால் வீரர்களை பாதுகாப்பதற்காக போராடுவேன் என இகோர் ஸ்டிமாக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது ட்விட்டர் பதிவில்,“ கால்பந்து என்பது வலுவான, கட்டுப்படுத்த முடியாத ஆர்வத்தை உள்ளடக்கியது. குறிப்பாக உங்கள் நாட்டின் வண்ணங்களைப் பாதுகாக்கும் போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எனது செயல்களுக்காக என்னை வெறுக்கலாம் அல்லது நேசிக்கலாம், ஆனால் நான் ஒரு போர்வீரன். ஆடுகளத்தில் எனது அணியின் வீரர்கள் நியாயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டால், அவர்களை பாதுகாப்பதற்காக தேவைப்படும்போது, நான் அதை மீண்டும் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

-th