அதிகரிக்கும் மாநில கும்பல் வன்முறை: 6 மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நாட்டில் அதிகரிக்கும் கும்பல் வன்முறையை தடுப்பதில் உச்ச நீதிமன்றம் 2018-ல் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 6 மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ப்பு அமைப்பான இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

மகளிர் கூட்டமைப்பினரின் அந்த மனுவில், பசுப் பாதுகாப்பு, கும்பல் வன்முறை ஆகியனவற்றில் இருந்து சிறுபான்மையினர் உள்பட பொதுமக்கள் உயிரை, உடைமைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபோன்ற சம்பவங்கள் குறையவில்லை. தெஹ்சீன் பூனாவாலா வழக்கில் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஜேபி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், பிஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில டிஜிபிக்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது.

கும்பல் வன்முறை தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரணைக்கே திருப்பி அனுப்புவதற்கு எதிராக கபில் சிபல் வாதிட்டார். அவர் வாதிடுகையில், “உச்ச நீதிமன்ற வழக்குகளை உயர் நீதிமன்றத்தின் பார்வைக்கே திருப்பி அனுப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ரூ.2 லட்சம் கிடைக்குமா? தெஹ்சீன் பூனாவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி கும்பல் வன்முறைகள் நடக்கின்றன.அதில் சிறுபான்மையினரே அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதில் என்ன தான் தீர்வு. நான் எங்கே செல்வேன்” என்றார்.

கடந்த முறை கும்பல் வன்முறை வழக்கு விசாரணையின்போதும் உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறே கூறியது. ஆனால் மாநிலங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதனையடுத்து உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

2018 உத்தரவு சொல்வது என்ன? கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பசுப் பாதுகாவலர்களால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசு குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில், தெஹ்சீன் பூனாவாலா எதிர் இந்திய அரசு (2018) வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் 6 மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

 

 

-th