ஹரியாணாவில் 144 தடை உத்தரவை மீறி பஞ்சாயத்து, முஸ்லிம்களுக்கு எதிராக அரசுக்கு நிபந்தனைகள்

மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹரியாணாவில் 144 தடை உத்தரவை மீறி கூடிய மகா பஞ்சாயத்து கூட்டம் ஒன்றில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் கடந்த ஜுலை 31-ல் நடைபெற்ற விஎச்பியின் ஊர்வலம் மதக்கலவரமாக மாறி இருந்தது. நூவை சுற்றியுள்ள குருகிராம், பல்வல், பரீதாபாத் மற்றும் உ.பி.யின் நொய்டா, காஜியாபாத் மாவட்டங்களுக்கும் பரவிய கலவரத்தால், பல இடங்களில் 144 தடை உத்தரவுடன் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி குருகிராமின் டிக்ரி பகுதியில் 200 கிராமங்களை சேர்ந்த சுமார் 700 பேருடன் நேற்றுமுன்தினம் மாலையில் மகா பஞ்சாயத்து நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் அட்டர் சிங் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி டிக்ரியை சுற்றியுள்ள கிராமங்களிலும் பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த பஞ்சாயத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஹரியாணா அரசுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

“கலவரத்தில் உயிரிழந்த இமாம் முகம்மது சாத் (26) கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 இந்து இளைஞர்களை 7 நாட்களுக்குள் விடுதலை செய்ய வேண்டும். குருகிராமின் செக்டர் 57-ல் அமைந்துள்ள அஞ்சுமன் மசூதி, இந்துக்களின் பகுதியில் இருப்பதால் அதை அகற்ற வேண்டும். இந்துக்கள் வாழும் கிராமங்களில் போலீஸாரின் திடீர் சோதனையை நிறுத்த வேண்டும். இதை அரசு ஏற்காவிடில் போராட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்துக்கள் பகுதியில் முஸ்லிம்கள் எவருக்கும் வாடகைக்கு வீடு அளிக்கக் கூடாது. வேலைகளும் தரக்கூடாது என பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்தின் முடிவுகள் தொடர்பாக 101 உறுப்பினர்களுடன் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தங்கள் நிபந்தனைகளை அரசு அதிகாரிகள் மற்றும் ஹரியாணா அமைச்சர்களிடம் மனுவாக அளித்து வலியுறுத்த உள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பஞ்சாயத்தில் கலந்துகொண்ட பஜ்ரங்தளம் உறுப்பினரும் நூ வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான குல்புஷன் பரத்வாஜ் கூறும்போது, “இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களுக்கு கலவரத்தில் எந்த தொடர்பும் இல்லை. மாலை வரை கலவரம் பற்றிய தகவலை அறியாத முதல்வர் மனோகர்லால் கட்டார் பதவி விலக வேண்டும். இங்கு ஆட்சிபுரிய உ.பி.யின் யோகி ஆதித்யநாத் போன்ற முதல்வர்தான் தேவை. இது சாத்தியமில்லை எனில், நூவை உ.பி.யுடன் இணைத்துவிட வேண்டும்” என ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

கலவரம் தொடர்பாக இதுவரை பதிவான 102 வழக்குகளில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மதத்தினரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட, ஆத்திரமூட்டும் 2,300 காட்சிப் பதிவுகள் அகற்றப்பட்டு, அவற்றின் மீது விசாரணை தொடர்கிறது.

முக்கியமாக இரண்டு காட்சிப்பதிவுகள் மிகவும் வைரலாகி கலவரத்திற்கு காரணமானதாக கருதப்படுகிறது. இதில் ஒன்று பசு பாதுகாவலரும் தலைமறைவு கொலைக் குற்றவாளியுமான மோனு மானேசரின் பதிவாகும். மற்றொன்று, பாகிஸ்தானிலிருந்து எஹசான் மேவாத்தி என்பவரால் வெளியிடப்பட்டது.

கலவரம் தொடர்பாக ஹரியாணா சிறப்புக் காவல் படைவிசாரணையும் தொடர்கிறது.கலவரத்தில் வன்முறையாளர் களால் 500 ரவுண்ட் துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

 

-th