இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம்

பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவைட் லிமிடெட் ஆகியவை இணைந்து ‘சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்’என்ற பெயரில் கார் பந்தய போட்டியை சென்னையில் நடத்த உள்ளனர்.

எஃப் 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் ஆகியவை வரும் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னை தீவுத் திடல் மைதானத்தில் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் மின்னொளியில் இரவு நேர போட்டியாக நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்த போட்டி இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் இரவு நேரத்தில் சாலையில் நடத்தப்படும் முதல் கார் பந்தய போட்டி என்ற பெருமையை பெற உள்ளது.

இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் 4 டிரைவர்கள் இருப்பார்கள். இதில் 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவார்கள். மேலும் ஒலிம்பிக் விதிமுறைகளின் படி ஒரு வீராங்கனையும் இருப்பார்.

இந்த போட்டிக்கான அறிமுகக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு தலைவர் அக்பர் இப்ராஹிம், ஆர்பிபிஎல் அமைப்பின் தலைவர் அகிலேஷ் ரெட்டி, இயக்குனர்களான அர்மான் இப்ராஹிம், அபிநந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பார்முலா ரேஸ் (ஆர்பிபிஎல்) அமைப்பினருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த போட்டிக்காக தமிழக அரசு ரூ.42 கோடி நிதி வழங்குகிறது. மேலும் சாலை கட்டமைப்பு, போட்டி பணிகளுக்காக தனியார் பங்களிப்பாக சுமார் ரூ.200 கோடி வரை செலவிடப்பட உள்ளதாக போட்டி அமைப்பார்கள் தெரிவித்தனர்.

இந்த போட்டியை 3 ஆண்டு காலத்துக்கு நடத்துவதற்கான உரிமத்தை ஆர்பிபிஎல் பெற்றுள்ளது. போட்டிக்கான பாதை தீவுத் திடல் மைதானம், போர் நினைவிடம் மற்றும் நேப்பியர் பாலம் முழுவதும் நீட்டிக்கப்படும். 3.5 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட இந்த பாதையில் 19 கார்னர்கள், பல வளைவுகள் ஏற்படுத்தப்படும்.

 

 

-th