பிஹார் பத்திரிகையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது

பிஹாரில் தனது வீட்டில் இருக்கும் போது உள்ளூர் பத்திரிக்கையாளர் விமல் குமார் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது அப்பா கொடுத்த புகாரின் பெயரில், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதுகுறித்து, சனிக்கிழமை காலையில் கைது செய்யப்பட்ட 4 பேர்களில், இருவர் விமல் குமாரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு சார்பஞ்சாக இருந்த விமல் குமாரின் தம்பி அதே பாணியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் விமல் குமார் முக்கிய சாட்சியாக இருந்தார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும் வழக்கு விசாரணையின் போது விமல் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்து வந்தார்.

பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டது பிஹாரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகையாளர் கொலைக்காக அரசை குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள் “பிஹாரில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக” தெரிவித்துள்ளன. பிஹார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி, “மாநிலத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். போலீஸாரும் கொலை செய்யப்படுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளர் கொலைக்கு வருத்தம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் நிதிஷ் குமார், “இது ஒரு துயரச் சம்பவம். கொலை குறித்த செய்தியை கேள்விப்பட்டதும் குற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

பிஹார் மாநிலம் அராரிய மாவட்டத்தைச் சேர்ந்தவர் விமல் குமார் யாதவ் (35). ராணிகஞ்ச் பகுதியில் வசித்து வந்த இவர் உள்ளூர் பத்திரிகையான டைனிக் ஜாகரனில் வேலை செய்துவந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணி அளவில் அவர் தனது வீட்டில் இருந்தபோது துப்பாக்கியுடன் வந்த நபர் கதவினைத் தட்டியிருக்கிறார். விமல் குமார் கதவினை திறந்ததும் அவரை நெஞ்சில் சுட்டுக்கொலை செய்தததாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் 5:35 மணிக்கு கொலை நடந்த இடத்துக்கு விரைந்து சென்றார். அராரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார்.

 

 

-th