உலகிலேயே மிக உயரமான சாலை – லடாக்கில் 19,400 அடி உயரத்தில் அமைக்கும் பணி தொடக்கம்

லடாக் பகுதியில் 19,400 அடி உயரத்தில் சாலை அமைக்கும் பணியை எல்லைகள் ரோடு அமைப்பு (பிஆர்ஓ) தொடங்கியுள்ளது. 64 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலை உலகின் மிக உயரமான வாகன போக்குவரத்து சாலையாக இருக்கும்.

லடாக்கின் டெம்சாக் பகுதியில் 19,400 அடி உயரத்தில் சாலைகள் அமைக்கும் பணியை பிஆர்ஓ அமைப்பு, சுதந்திரத் தினத்தன்று தொடங்கியது. 64 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலை ‘லிக்காரு-மிக் லா-ஃபகி’ என அழைக்கப்படும். ஃபகி என்ற இடம் இந்தியா-சீனா எல்லையில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு இந்த சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். வேலை செய்வதற்கான அடுத்த இரண்டு சீசனில் இந்த சாலை கட்டுமானப் பணியை முடிக்க பிஆர்ஓ திட்டமிட்டுள்ளது.

லடாக்கில் 19,024 அடி உயரத்தில் உம்லிங் லா என்ற இடத்தில் பிஆர்ஓ ஏற்கெனவே வாகன போக்குவரத்துக்கான சாலையை அமைத்துள்ளது. தற்போது 19,400அடி உயரத்தில் சாலை அமைப்பதன் மூலம், தனது சொந்த சாதனையை பிஆர்ஓ முறியடிக்கவுள்ளது. பிஆர்ஓ-வின் பெண்கள் பிரிவு இந்த சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தபணியை கர்னல் போனங் டொமிங் தலைமையில் பெண்பொறியாளர்கள் குழு மேற்பார்வையிடுகிறது.

மேலும் இரண்டு முக்கிய திட்டங்களில் பிஆர்ஓ ஈடுபடவுள்ளது. சிங்கு லா என்ற சுரங்கப்பாதையை பிஆர்ஓ அமைக்கவுள்ளது. இது லே மற்றும் மணாலியை ஜன்ஸ்கர் வழியாக இணைக்கும். இப்பணி முடிவடைந்தால், சீனா அமைத்த மிலா சுரங்கப்பாதை சாதனையை முறியடிக்கும்.

கிழக்கு லடாக் பகுதியில் ‘நியோமா விமானதளம்’ அமைக்கும் பணியிலும் பிஆர்ஆ ஈடுபட்டுள்ளது. இப்பணி முடிவடைந்தால், உலகின் மிக உயரமான விமான தளமாக இருக்கும் என பிஆர்ஓ அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி கூறியுள்ளார்.

 

 

 

-th