நெதர்லாந்து, அமெரிக்க மியூசியங்களில் உள்ள சோழர் கால சிலைகள், தாமிர தகடுகளை மீட்கக் கோரி வழக்கு

நெதர்லாந்து, அமெரிக்க மியூசியங்களில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிலைகள் மற்றும் தாமிர தகடுகளை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் விரிவாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் பி.ஜெகந் நாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தின் புராதன சின்னங்கள், பழங்கால கோயில் சிலைகள் மற்றும் விலை மதிப்பற்ற அரிய பொருட்கள் வெளி நாட்டுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள மியூசியங்களில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சோழர்கள், பல்லவர்கள் காலத்து சிவா, விஷ்ணு மற்றும் புத்தர் சிலைகள் அமெரிக்காவின் நியூயார்க் ஏசியன் ஆர்ட் மியூசியத்திலும், சிகாகோ ஆர்ட் மியூசியத்திலும் உள்ளன. ராஜ ராஜ சோழன் காலத்து தாமிர தகடுகள் நெதர்லாந்தில் உள்ள லேடன் பல்கலைக் கழகத்தில் உள்ளது.

இதில் பல்வேறு ஆவணங்கள் தமிழில் உள்ளன. நாகப்பட்டினத்தில் புத்த பிட்சுகளின் மையம் குறித்தும், ஆன்மீகம் குறித்தும் சோழர் காலத்து தாமிர தகடுகளில் குறிப்புகளாக உள்ளன. எனவே சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தியாவுக்கு சொந்தமான இந்த புராதன சின்னங்களை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, நெதர்லாந்தில் உள்ள தாமிர தகடுகளை ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார். அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.30-க்கு தள்ளி வைத்தனர்.

 

 

-th