இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க நியூஸ்கிளிக் நிறுவனர் சதி – டெல்லி காவல் துறை குற்றம்சாட்டு

காஷ்மீரும், அருணாச்சலப் பிரதேசமும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்தி பரப்ப நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா முயன்றதாக டெல்லி காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது.

சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை பரப்புவதற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் நியூஸ் கிளிக்கில் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: “ஷாங்காயை மையமாகக் கொண்ட நிறுவனத்தை நடத்தி வரும் நெவில்லி ராய் சிங்கம் என்ற தொழிலதிபரும், அவரது நிறுவன பணியாளர்களும், பிரபுர் புர்கயஸ்தாவும் இமெயில்கள் மூலம் தொடர்பில் உள்ளனர்.

காஷ்மீரும் அருணாச்சலப் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் அல்ல; அவை சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்தியை உருவாக்கி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டிருப்பது அந்த மெயில்கள் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இத்தகைய செய்தியை பரப்புவது குறித்து அவர்கள் சதி திட்டம் தீட்டி இருக்கிறார்கள். இது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான திட்டமிட்ட சதி செயல்.

நியூஸ் கிளிக்கின் பங்குதாரரான கௌதம் நவ்லகா, தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்புகளை தீவிரமாக ஆதரிப்பது, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஏஜென்டான குலாம் நபி ஃபாயுடன் சேர்ந்து தேச விரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், புர்கயஸ்தாவும், அவரது கூட்டாளிகளும் வெளிநாட்டு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

 

 

-ht