ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் இலக்கை போராடி வென்றது இந்திய அணி

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்தில் விராட் கோலியின் அற்புதமான கேட்ச்சால் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருடன் இணைந்து நிதானமாக பேட் செய்தார். இந்த ஜோடியால் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்த முடியவில்லை. வார்னர் 52 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் 71 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் பந்தில் போல்டானார். இதன் பின்னர் மார்னஷ் லபுஷேன் 27, அலெக்ஸ் கேரி 0, கேமரூன் கிரீன் 8, பாட் கம்மின்ஸ் 15, ஆடம் ஸம்பா 6, மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களில் நடையை கட்டினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 110 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து வலுவாகவே இருந்தது. ஆனால் அங்கிருந்து மேற்கொண்டு 30 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை கொத்தாக தாரைவார்த்தது. இறுதிக்கட்டத்தில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது பங்களிப்பின் காரணமாகவே ஆஸ்திரேலிய அணியால் 199 ரன்கள் வரை சேர்க்க முடிந்தது.

இந்திய அணி சார்பில் ஜடேஜா 3, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மொகது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 200 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் (0) ஆட்டமிழந்தார். ஜோஷ் ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா (0), ஸ்ரேயஸ் ஐயர் (0) ஆகியோர் ஆட்டமிழக்க மைதானமே அதிர்ச்சியில் உறைந்தது.

2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது. விராட் கோலி 12 ரன்களில் இருந்த போது ஜோஸ் ஹேசில்வுட் வீசிய ஷார்ட் பாலை விளாச முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு உயரமாக சென்றது. மிட்விக்கெட் திசையில் இருந்து ஓடி வந்து பிடிக்க முயன்ற மிட்செல் மார்ஷ் தவறவிட்டார். இந்த வாய்ப்பை விராட் கோலி பயன்படுத்திக் கொண்டார்.

நிதானமாக விளையாடிய விராட் கோலி 75 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் தனது 67-வது அரை சதத்தை கடந்தார். அதேவேளையில் கே.எல்.ராகுல் 72 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் தனது 16-வது அரை சதம் அடித்தார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிக் கோட்டை நெருங்கியது. சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 116 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில், லபுஷேனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா,ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசினார். மேக்ஸ்வெல் வீசிய 41-வது ஓவரில் முதல்இரு பந்துகளையும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார் கே.எல்.ராகுல். பாட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் கே.எல்.ராகுல் கவர் திசையை நோக்கி சிக்ஸருக்கு விளாச இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 115 பந்துகளில், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 97 ரன்களும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி முழுமையாக 2 புள்ளிகளை பெற்றது.

சுழலில் 6 விக்கெட் காலி: ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சில் 30 ஓவர்களில் 104 ரன்களை சேர்த்த நிலையில் 6 விக்கெட்களை தாரைவார்த்தது. அதேவேளையில் வேகப்பந்து வீச்சில் 19.3 ஓவர்களை எதிர்கொண்டு 89 ரன்களை சேர்த்து 4 விக்கெட்களை பறிகொடுத்தது.

திருப்பிக்கொடுத்த கோலி: மிட்செல் ஸ்டார்க் வீசிய 34-வது ஓவரின் முதல் பந்தை விராட் கோலி விளாச முயன்றார். அது பந்து, ஹெல்மட்டின் பின் பகுதியை சற்று பலமாக தாக்கியது. இதையடுத்து பிசியோ களத்திற்குள் வந்து விராட் கோலிக்கு மூளை அதிர்ச்சி சோதனை செய்தார். இதில் பெரிய அளவில் ஒன்றும் இல்லாததை அடுத்து விராட் கோலி தொடர்ந்து பேட் செய்தார். அடுத்த பந்தை விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டி பதிலடி கொடுத்தார்.

மோசமான சாதனை: இந்திய அணியின் பேட்டிங்கின் போது இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டில் வெளியேறியது இதுவே முதன் முறையாகும்.

 

 

-ht