மக்களவைத் தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலேயே முஸ்லிம்கள் வாக்களிப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2014, 2019 தேர்தல் முடிவுகளின் புள்ளிவிவர ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை, டெல்லியின் பொதுநல அமைப்பான ஸ்பெக்ட் பவுண்டேஷன் நடத்தியுள்ளது.
மத்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் அனைத்து தேர்தல்களின் முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்தப் புள்ளிவிவரங்கள் கிட்டியுள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 130 மக்களவை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக ஸ்பெக்ட் அமைப்பின் புள்ளிவிவரத்தில் வெளியாகி உள்ளது.இதில், 2014, 2019 மக்களவை தேர்தலின் குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களின் முடிவுகளில் 100 தொகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வுக்கான 100 தொகுதிகளிலும் முஸ்லிம் வாக்காளர்கள் 15 முதல் 50 சதவிகித எண்ணிக்கையில் உள்ளனர். இந்த ஆய்வில், உத்தரப்பிரதேசம் 29, பிஹார் 18, அசாம் 10, கர்நாடகா 8 மற்றும் மேற்குவங்க மாநிலம் 28 மக்களவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நூறு தொகுதிகளில் பாஜக 2019 தேர்தலில் 48 தொகுதிகளை வென்றுள்ளது. இதற்கு அந்தத் தேர்தலின் வாக்குப்பதிவின் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க முன்வராதது காரணம் என புள்ளி விவரத்தில் தெரிந்துள்ளது. இருப்பினும் இதற்கானக் காரணங்கள் என்ன என்று ஸ்பெக்ட் ஆராயவில்லை.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஸ்பெக்ட் அமைப்பின் நிறுவனர்களாக நதீம் கான் மற்றும் லேக் கான் கூறும்போது, “சுமார் 10 வருடங்களுக்கு முன்வரையிலானத் தேர்தல்களில் முஸ்லிம்களால் இருந்த தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இதற்கு முஸ்லிம்கள் குறைந்த அளவில் வாக்களிப்பது முக்கியக் காரணம். இவர்களது தொகுதிகளில்போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் தாக்கமும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றன.இந்து வாக்குகள் ஒன்றிணைவதும், முஸ்லிம் வாக்குகள் சிதறுவதும் பாஜகவின் வெற்றிக்குக் காரணமாகி உள்ளது” எனத் தெரிவித்தனர்.
முஸ்லிம் வாக்குகள் அதிகமுள்ள உ.பி.யின் பாக்பத்தில் 2019 தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட இல்லை என்றாலும், அங்கு பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுபோன்ற காரணம் குறித்து ஸ்பெக்ட் தனது ஆய்வின் 100 தொகுதி முஸ்லிம்களிடம் பேசியுள்ளது. இதில், முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க அதிகம் செல்லாதது காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சனை கர்நாடகாவின் சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் வரவில்லை. ஏனெனில், அப்போது குறிப்பாக முஸ்லிம் பெண்களை திரளாக வாக்களிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. இதே காரணத்தினால்தான் பாஜகவால் தென் இந்தியாவின் இதர மாநிலங்களில் கால் பதிக்க முடியவில்லை எனவும் ஸ்பெக்ட் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இத்துடன், சமீப காலங்களில் பல முஸ்லிம்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும், இதை மீண்டும் சேர்க்க அவர்கள் முயற்சிக்கவில்லை என்ற புகார்களும் உள்ளன. மேலும், பல முஸ்லிம்கள் வாக்குச்சாவடிக்குச் சென்றும் பல்வேறு காரணங்களால் வாக்களிக்க முடியவில்லை எனக்கூறிய புகார்களையும் ஸ்பெக்ட் பதிவு செய்துள்ளது. இது குறிப்பாக, உ.பி.,யில் முஸ்லிம்கள் அதிகமுள்ள ராம்பூர் தேர்தலில் நடந்துள்ளதாகவும் புகார் உள்ளது.
ராம்பூர், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் பல ஆண்டுகளாக வென்ற தொகுதி ஆகும். ஆசம்கான் இத்தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், இதன் இடைத்தேர்தலில் பாஜக முதன்முறையாக வெற்றி பெற்றிருந்தது.
இதுபோன்ற, புள்ளிவிவரங்களையும் பதிவிட்டுள்ள ஸ்பெக்ட், முஸ்லிம்களில் ஆண்களும், பெண்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும், இதன் பலன் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அன்றி இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கவும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது
-dt