தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு

கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கையெழுத்திடாததால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், ‘மசோதாக்கள், அரசாணைகளை ஆளுநர்கிடப்பில் போடுகிறார்’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதே நிலை கேரளாவிலும் உள்ளது. அதனால் கேரள அரசும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து கேரள சட்ட அமைச்சர் ராஜீவ் கூறியதாவது: நீண்ட ஆலோசனைக்கு பிறகு, விதிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றிஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்புகிறோம். ஆனால் அவர், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி கிடப்பில் போட்டுள்ளார். இது அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது.

மசோதா நிறைவேற்றப்பட்ட உடனே, அரசியல் சாசனத்தின் 200-வது விதிப்படிஆளுநர் செயல்பட வேண்டும். சில மசோதாக்களில் ஆளுநர் முகமது ஆரிப் கான் இந்த நடைமுறையை பின்பற்றவில்லை. லோக் ஆயுக்தாதிருத்த மசோதா மற்றும் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்கள் கிடப்பில் உள்ளன.

‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றிகிடப்பில் போடக்கூடாது. விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், சில மசோதாக்களை சுமார் 2 ஆண்டுகளாக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

மசோதாவில் ஆட்சேபம் இருந்தால், அதை சட்டப்பேரவைக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால், அதில் திருத்தங்கள் செய்தோ அல்லது மாற்றம் செய்யாமலோ மீண்டும் நிறைவேற்றுவது பற்றி சட்டப்பேரவை முடிவெடுத்திருக்கும்.

அரசியல் சாசன உறவு: ஆளுநர் தனது அரசியல்சாசன கடமையை செய்யாததால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தோம். இது அரசு மற்றும் ஆளுநர் இடையிலான பிரச்சினை அல்ல. இது சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் இடையிலான அரசியல் சாசன உறவு பற்றியது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்பிரச்சினை தொடர்பாக கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் ஏற்கனவே அளித்த பதிலில் கூறியிருந்ததாவது:

சில மசோதாக்கள் குறித்த எனது கேள்விகளுக்கு கேரள அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை. மசோதாவை கொண்டுவந்த அமைச்சரால் என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. இதனால், இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டுள்ளேன். முதல்வரிடம் இருந்து எந்தவித விளக்கமும் வராததால், மசோதாக்கள் கையெழுத்திடப்படாமல் உள்ளன. இவ்வாறு ஆளுநர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

-ht