வளர்ந்த நாடாவதற்கு வழிகளை காண வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவை வேகமாக வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வழிகளை கண்டறிவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சிந்திக்க வேண்டும் என ‘வளர்ச்சியடைந்த இந்தியா-2047’ பயிலரங்கில் பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.

வளர்ச்சியடைந்த இந்தியா-2047 – இளைஞர்களின் குரல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த முயற்சியின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நாடுமுழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வி நிறுவனத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.

இதன்படி சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடந்த பயிலரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

வளர்ச்சியடைந்த இந்தியாவின் 2047 இலக்கை அடைவதில் நாட்டின் இளைஞர்களை வழிநடத்தும் பொறுப்பை வகிக்கும் அனைவரின் பங்களிப்புக்கும் பாராட்டுகள். மக்களின் மேம்பாட்டால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சி அடையும். ஒரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அதிவேக முன்னேற்றங்களை அடையும் ஒரு காலகட்டத்தை வரலாறு வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த அமிர்தகாலம் தொடர்கிறது. இந்திய வரலாற்றில் நாடு ஒரு பெரிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருக்கும் காலம் இதுவாகும். இந்த அமிர்தகாலத்தின் ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்த வேண்டும்.

தேசத்தின் சுதந்திரத்துக்காக ஒரு தலைமுறையின் அனைத்து இளைஞர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினர். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் சுதந்திரத்தின் இலக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு முயற்சியும், செயலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காகவே இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளின் குறிக்கோள், உங்கள் தீர்மானங்கள் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

இந்தியாவை வேகமாக வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வழிகளைக் கண்டறிவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சிந்திக்க வேண்டும். வளர்ந்த நாடாக மாறுவதற்கான முன்னேற்றத்துக்கு குறிப்பிட்ட துறைகளை அடையாளம் காண வேண்டும். மக்களிடையே தேசிய நலன் மற்றும் குடிமை உணர்வு விழிப்புடன் இருக்க வேண்டும்.

இளைஞர்கள் செல்போன்களுக்கு அப்பால் உலகை ஆராய்வதற்கான வழிகளை பரிந்துரைப்பது பற்றி கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற லட்சியத்துக்காக நாம் 24 மணி நேரமும் உழைக்க வேண்டும். ஒரு குடும்பமாக நாம் உருவாக்க வேண்டிய சூழல் இதுதான்.

நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை, இளைஞர்களால் அதிகாரம் பெறுகிறது. அடுத்த 25-30 ஆண்டுகளில் உழைக்கும் வயது கொண்டோரின் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா முன்னணியில் இருக்கும். இதை உலகம் அங்கீகரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

 

-ht