இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரிம 15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது செல்லப் பூனையின் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
கோடீஸ்வரரின் மனைவி மரியா அசுந்தா (94). அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் அநாதையாகத் திரிந்த கறுப்புப் பூனையை வீட்டுக்குக் கொண்டு வந்தார். அந்தப் பூனையை குழந்தை போல் பராமரித்து வளர்த்தார். பூனையும் அவர் மீது பாசமாக இருந்தது.
அந்தப் பூனைக்கு ‘டொம்மாசோ’ என்று பெயர் வைத்தார். திடீர் என்று மரியாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம், மிலன் ஆகிய நகரங்களிலுள்ள தனது வீடுகள், கலாப்ரியா என்ற இடத்தில் உள்ள நிலங்கள், ரொக்கம், பங்குப் பத்திரங்கள் ஆகியவற்றை பூனையின் பெயரில் எழுதி வைத்தார். அந்தச் சொத்துக்களின் மதிப்பு ரிம 15 கோடி ஆகும்.
இத்தனை சொத்துக்களையும் வைத்துக் கொண்டு தனது பூனையை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுமாறு அவர் பல மிருக நல அமைப்புகளை அணுகினார். ஆனால், எந்த அமைப்பும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து அவர் தன்னைக் கவனித்துக் கொள்ள ஸ்டெபானியா என்ற தாதியை பணிக்கமர்த்தினார். அத்துடன் பூனையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் ஸ்டெபானியாவுக்கு அளித்த மரியா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உயிர் இழந்தார்.