கலாச்சார அதிர்வும் ‘திடாக் ஆப்பாவும்’

தமிழ்ப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் தரத்தைச் சோதனையிடுவதற்காக வட்டாரக் கல்வி இலாக்காவிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அனைவரும் மலாய் அதிகாரிகள்!

தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் போதனா முறையை இவர்களால் எவ்வகையில் மதிப்பிட முடியும்? அவ்வதிகாரிகள் ஆசிரியரின் பாடத்திட்டப் பதிவுப் புத்தகத்தைப் புரட்டி விட்டு, மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை மேலோட்டமாகப் பார்வையிடுகின்றனர். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் சிலர், சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படிச் செயல்பட்டு “நற்பெயர்” வாங்குவதென தெரிந்து வைத்துள்ளனர்.

மாணவர்களின் பயிற்சி புத்தங்களில் சரியான பதில்கள் இருப்பதற்கான ‘பாஸ்’ அடையாளக் குறிகளையும், மொத்த கூட்டு எண்ணிக்கையையும் பார்த்துவிட்டு மனநிறைவு கொள்கின்றனர். ஆனால், இத்தகைய மாணவர்களில் ஓரிருவர் எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கின்றனர் என்பதை அதிகாரிகள் அறிவரா?  இவ்விவகாரம் குறித்துப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஒருவர் கல்வி  இலாக்கா அதிகாரிகளுடன் பேசியுள்ளார். ஆனால் அது குறித்த ஆய்வோ  நடவடிக்கையோ இதவரை கிடையா!

அடுத்து, மலாய் மொழி தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகத்தான் ‘ரிமுவ் க்ளாஸ்” எனப்படும் புதுமுக வகுப்புக்கு மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். அனால் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குத் தமிழ் மொழி தெரியாததாலும், போதிய அக்கறை செலுத்தாததாலும், மாணவர்கள் எவ்வித முன்னேற்றமுமின்றி ஓராண்டு காலத்தை வீணடிக்கின்றனர். புதுமுக வகுப்பில் நுழையும் மாணவர்களில் பெரும்பாலோர் ஏழைக் குடும்பம் அல்லது படிப்பில்லா பெற்றோரைக் கொண்டிருப்பவர்கள். விரக்தி கொண்ட இத்தகைய மாணவர்கள்தாம் திடீரெனப் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சீர்கேடான நடவடிக்கைகளில் இறங்கிவிடுகின்றனர். மனோவியல் படி அவர்களுக்கு வேண்டியது அங்கீகாரம்!

இந்நிலைமை குறித்து தமிழ்ப்பள்ளிகள் நன்கு அறிந்திருந்தும் புகார் செய்யாதது வருத்தத்திற்குரியது.அதே வேளை பிற தரப்பினர் புதுமுக வகுப்பு தொடர்பான  குறைபாடுகளை மாநில கல்வித் துறைக்குக் கொண்டு சென்றாலும், அங்குள்ள அதிகாரிகள் பகைமை பாராட்டுகின்றனர். இவர்களுக்கெல்லாம் “நமக்கென்ன?” மாதக் கடைசியில் சம்பளக் காசோலையில் கிடைத்தால் போதும் என்கிற “தீடாக் ஆப்பா” போக்கு தானா?

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் நுழையும் போது, அங்குள்ள மலாய் சூழலால் “கலாச்சார அதிர்வுக்கு” இலக்காகின்றனர். சூழ்நிலைக்கு ஏற்ற- வாறு தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்குச் சிறிது காலம் பிடிக்கின்றது. படித்தக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய மாணவர்கள் இப்பிரச்னையை எதிர்-கொள்வதில்லை. ஆனால், ஏழை, எளிய குடும்பப் பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், கல்வி அமைச்சும்,  தன்னை “பாதுகாவலன்” எனப் பிரகடணப்படுத்திக் கொள்ளும் ம.இ.கா.வும் இது குறித்து வாளாவிருக்கின்றன.  அம்னோ அரசாங்கம் திருத்தம் கொண்டுவரும் என ம.இ.கா.வும் இன்னும் பெரும் நம்பிக்கை வைத்திருகின்றது.

தமிழ்க் கல்வியின் மாண்பு மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ்ப் பள்ளிகளின் பால் சில ம.இ.கா.வினர் கொண்டுள்ள ஆளுமையும், ஆதிக்கமும் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் பெரும்பாலான தமிழ்ப் பள்ளித் தலைமைத்துவத்தில் ம.இ.கா. கிளைத்தலைவர்களே இருந்தனர். அது மட்டுமல்ல தமிழ்ப் பள்ளிகள் ம.இ.கா.விற்கு அப்போது காப்பமாக இருந்தன.

இந்திய மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை இருக்குமாயின் தமிழ்ப் பள்ளிகள் உடனடியாக விழித்தெழ வேண்டும்! தன்னிறைவு திருப்தியிலிருந்து மீள வேண்டும்! நகர்ப்புற, புறநகர்ப்பகுதி தமிழ்ப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்  இன்னமும் சராசரி 50%ஆக உள்ளதெனில், தோட்டப் புற பள்ளிகளின் நிலை என்ன என்பதை எண்ணிப்பார்போம். இதற்குத் தீர்வுதான் என்ன?

தொடக்கப் பள்ளிகளில் மலாய், ஆங்கிலப் பாடங்கள் கூடுதலாகப் போதிக்கப்படுவது சிறப்பு. இடைநிலைப் பள்ளிகளில் சரளமாக மலாய் மொழியில் பேசும் அளவிற்கு இந்திய மாணவர்களின் மொழித் திறன் பிரகாசிக்க வேண்டும்.

பெற்றோர் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதோடு சரி அதற்கு மேல் எதையும் கண்டுகொள்ளாத் தன்மை மாற வேண்டும். மாணவர்களின் அடைவு நிலையில் பெற்றோரும் அதிக அக்கறை செலுத்துவது சாளச் சிறந்தது. ஏழை பெற்றோர்கள் அனுதினமும் வேலைக்குச் செல்வதால்  பள்ளிக் கூட்டங்களில் கலந்துகொள்ள இயலாத நிலை உள்ளது. இருப்பினும் அவர்களைக் கவர்ந்து இழுப்பதற்கான உசித நடவடிக்கைகளை பள்ளி  நிர்வாகம் மேற்கொள்வது விவேகம்.

சில நன்நோக்க ஆர்வாலர்களும், அரசு சார்பற்ற இயக்கங்களும் தங்களால் இயன்ற சேவைகளை ஆற்றி வந்தாலும், அவை போதாது. முன்னாள் மாணவர்களையும் பள்ளியின் பால் ஈர்க்கவேண்டும். நன்நிலையில், உயர் பதவியில், செல்வாக்கில் உள்ள அன்றைய மாணவர்கள் தங்கள் தாய்ப் பள்ளிக்கு உதவி நல்கிட முன்வருவார்கள். 

“ரிமுவ்” எனும் ஆங்கில சொல்லின் பொருள் அகற்றுதல்.

நம் பிள்ளைகள் இடைநிலைப் பள்ளியில் கால் வைத்த ஓராண்டுக்குள் அகற்றப்படக் கூடாது!

அல்லது பள்ளி வாழ்விலிருந்து காணாமல் போகக் கூடாது!!

 அன்றி நன்நெறியிலிருந்து விலகிப் போகக் கூடாது!!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன்.